×

பள்ளிகள் திறந்ததும் மாணவர்களின் உடல், மன நலனுக்கு சிறப்பு பயிற்சி: கல்வித்துறை திட்டம்

சென்னை: பள்ளிகள் திறந்ததும் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கவும், மாணவர்களின் உடல், மன நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் தொடக்க கல்வி, உதவி பெறும் பள்ளிகள்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு மேம்பட தமிழ்நாடு அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் உடல்நலன் மற்றும் மன நலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளிலேயே அமர்வுகள் நடத்த சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற பொருள்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உடல், மன நலம் பேணும் வகையில் கல்வியை பெறும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பை பெறுகின்றனர். இதற்கென அரசு பள்ளிகளில் கண்ணொளி காப்போம் திட்டம், தேசிய குழந்தைகள் நல திட்டம், வாராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்து மாணவர்களின் கற்றல் முறைகளில் குறிப்பிடத்தகுந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல், மன நலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகளை செய்யவும், இளைஞர் நீதிச்சட்டம், போக்சோ சட்டம், சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் போன்ற அரசு நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்தவும் அரசு உறுதி பூண்டுள்ளது.

அதனை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஜூன் 26ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும், ஜூன் 27 முதல் 30ம் தேதி வரை மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, சமூக பாதுகாப்பு துறை, காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் இடைநிற்றலை தடுக்க ‘தொடர்ந்து கற்போம்’ திட்டம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொடர்ந்து கற்போம் என்ற ஒரு முன்னோடி திட்டத்தை வடிவமைத்து அதனை அரசு பள்ளிகளில் செயல்படுத்த திட்ட ஏற்பளிப்பு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இத்திட்டம் நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தொடர்ந்து கற்போம்’ திட்டம் மூலம் மாவட்டங்களில் பள்ளி அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு அந்தந்த உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு இந்த திட்டம் ஜூன் 1 முதல் 30 வரை 30 நாட்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ₹1 கோடியே 99 லட்சத்து 43 ஆயிரத்து 280 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்வது, தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் பங்குபெற செய்வது மற்றும் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதி கல்வியை தொடர செய்வதை உறுதி செய்தல் ஆகும்’ என்றார்.

The post பள்ளிகள் திறந்ததும் மாணவர்களின் உடல், மன நலனுக்கு சிறப்பு பயிற்சி: கல்வித்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Education Department Programme ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...