×

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹23 லட்சம் மோசடி மாஜி அதிகாரி கைது: மற்றொரு அதிகாரி மீது வழக்கு

தேனி: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹23 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே காமராஜர் நகரில் குடியிருப்பவர் செல்வம் (60).

இவர் தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் ராஜா மற்றும் மருமகள் சோனியா ஆகியோர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர். எனது நண்பர் ஒருவர், பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமாயி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இவர் அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவார் என்றும் கூறினார். இதனையடுத்து, ராமாயி, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் டிஇஓவிற்கு நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மாரியம்மாளை அறிமுகம் செய்தார்.

அப்போது, எனது மகன் மற்றும் மருமகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும், இதற்கு தலா ரூ.17 லட்சம் வீதம் ரூ.34 லட்சம் தர வேண்டுமென ராமாயி, மாரியம்மாள் என்னிடம் கூறினர். இதனை நம்பி பல தவணைகளாக ரூ.24 லட்சத்தை மாரியம்மாளிடம் கொடுத்தேன். ஆனால் ஆசிரியர் பணி வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டபோது, ரூ.1 லட்சத்தை மட்டும் மாரியம்மாள், ராமாயி கொடுத்தனர். மீதத்தொகையான ரூ.23 லட்சத்தை தராமல் மோசடி செய்துள்ளனர். எனவே, ராமாயி, மாரியம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இதையடுத்து தேனி குற்றப்பிரிவு போலீசார், ராமாயி, மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மாரியம்மாளை கைது செய்தனர்.

The post ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹23 லட்சம் மோசடி மாஜி அதிகாரி கைது: மற்றொரு அதிகாரி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...