
மதுரை:‘நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஒன்றிய நிதியமைச்சகம் சோம்பேறித்தனமாக செயல்படுவதாக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்து உள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஒன்றிய அரசின் சார்பில் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு ஒன்றிய வனத்துறை செயலர் மற்றும் நாடாளுமன்ற செயலக இணை செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரியாதவர்கள் தங்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, திருத்த மசோதாவை தமிழ் மொழியில் வெளியிடுமாறும், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தமிழில் அனுப்ப அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்கள் கேட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன், ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகி, ‘‘நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசின் மற்ற முன்னெடுப்புகள் பாதிக்காத வகையில் வனத்திருத்த மசோதாவிற்கான கருத்துக்களை தமிழில் பெறுவதற்கு தயாராக உள்ளோம். எனவே, இடைக்காலத் தடையை நீக்கக் கோரும் ஒன்றிய அரசின் மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘வன திருத்த மசோதா தொடர்பான அறிவிப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கக் கோர என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது? பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதை நிறைவேற்ற அவசரம் காட்டவில்லை. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. குறிப்பாக மதுரை கடன் வசூல் தீர்ப்பாய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காலியிடம் 2 ஆண்டுக்கு மேலாக நிரப்பப்படவில்லை. நீதிமன்றம் எத்தனையோ உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. இன்னும் யாரையும் நியமிக்கவில்லை.
ஆனால், நீதிமன்ற தடையை மட்டும் உடனடியாக நீக்க வேண்டும் என்கிறீர்களே? ஏன் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் நிதியமைச்சகம் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக நிதித்துறை சோம்பேறித்தனமாக செயல்படுகிறது’’ என்றனர். பின்னர் மனுவாக தாக்கல் செய்தால் இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினர்.
The post நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஒன்றிய நிதித்துறை சோம்பேறி: நீதிபதிகள் கருத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.