ஈரோடு,ஜூன்2: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன் நாளை (3ம் தேதி) கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிட கோரி அமைச்சர் சு.முத்துசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர், திமுகவின் தலைவராய் நீண்ட நாட்கள் பணியாற்றிய நம் உயிரினும் மேலான தலைவர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளான நாளை(3ம் தேதி) மக்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்பேரில், ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள், கட்சியினர் அனைவரும் அவர்களது வீடுகள் முன் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும். மேலும், தி.மு.க கொடியை ஏற்றி, கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா நாளை (3ம் தேதி) துவங்கி 2024ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டு காலம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்திட முன்னேற்பாடுகளையும் திமுக.வினர் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
The post கலைஞர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க அமைச்சர் சு.முத்துசாமி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.