×

மனிதக்கழிவுகளை மனிதரே அகற்ற தடை சட்டம்: விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேச்சு

ஆவடி: ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றத்தடை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் உள்ள அலுவலகத்தில் மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றத்தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகனங்களின் உபயோகம், லைசென்ஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். மேலும், கண்காணிப்பு பொறியாளர் முகம்மதுசபிபுல்லா, உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

ஆணையர் தர்ப்பகராஜ் பேசுகையில், ஆவடி மாநகராட்சிப் உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கசடு கழிவு நீர் அகற்றும் வாகனங்கள், அரசு விதிகளின் படி, தகுதிச் சான்று போன்ற விபரங்கள் நகராட்சியில் பெறுவதற்கு உரிமக்கட்டணம் ரூ.2000 செலுத்தி உரிமம் பெற்று இருக்க வேண்டும். கழிவு நீர் அகற்றும் வாகன இயக்கத்தினை கண்காணித்திட ஜிபிஎஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். வாகனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.10 லட்சத்திற்கு தனிநபர் விபத்து காப்பீடு செய்து இருக்க வேண்டும். பணியாளர்களை நச்சு நீர்த் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்கக் கூடாது. இயந்திரங்கள் கொண்டுதான் கழிவு நீர் அகற்ற வேண்டும்.

சேகரிக்கப்படும் கழிவு நீரை கோவர்த்தனகிரி மற்றும் அண்ணனூர் பகுதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று அகற்றப்பட வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் யாரும் நச்சு நீர்த் தொட்டியில் இறங்கத் தடை உள்ளது. மீறி இறங்கி பணி செய்வது தெரிய வந்தால், அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். மனிதக்கழிவுகளை மனிதனே அகற்ற தடை உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என இந்த கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்திற்கான, ஏற்பாடுகளை மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், மொஹிதின் செய்திருந்தனர், மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், துலக்குநர்கள், தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

* இழப்பீட்டுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும்
சென்னை புழல் அடுத்த காவாங்கரையில் கடந்த மாதம் 15ம் தேதி நிர்மலா என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஊழியர்கள் பாஸ்கரன், இஸ்மாயில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த வீட்டில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 1993ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டில் விஷவாயு தாக்கி 225 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆய்வு கூட்டம் நடத்தி தூய்மை பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறினார். அந்த பணத்தில் உடனடியாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு சம்பவம் நடைபெற்ற இடத்தின் உரிமையாளர் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு உள்ள நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். சிறை தண்டனையையும் ஓராண்டில் இருந்து 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் என்று அதிகரித்தால் உயிரிழப்பு குறையும் என்றார்.

The post மனிதக்கழிவுகளை மனிதரே அகற்ற தடை சட்டம்: விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Corporation's Commission ,Awaadi ,Awadi Municipal Office ,Awadi Municipal ,Dinakaran ,
× RELATED திடக்கழிவு மேலாண்மையை சிறந்த...