×

பறிமுதல் வாகனத்தை பயன்படுத்திய சித்தாமூர் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் பணி நீக்கம்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் பகுதி சேர்ந்தவர் சிவபாலன் (28). இவர், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2019ம் ஆண்டு புதிதாக ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். வாகனம் வாங்கிய சில மாதங்களில் சிவபாலனின் வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஒருவர் இறந்துள்ளார். சித்தாமூர் போலீசார் சிவபாலனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பான வழக்கு மற்றும் இருசக்கர வாகன இன்ஷூரன்சை சரிசெய்த சிவபாலன், தனது இருசக்கர வாகனத்தை திரும்பகேட்டு சித்தாமூர் காவல்துறையினரை பலமுறை அனுகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த அதே 2019ம் சிவபாலன் மீண்டு காவல் துறையிரை அனுகி தனது வாகனத்தை கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் சிவபாலனிடம் விபத்தில் மிகவும் சேதமடைந்த வேறொரு இருசக்கர வாகனத்தை காட்டி அந்த வாகனத்தை கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். சிவபாலன், அது என்னுடைய வாகனம் இல்லை. நம்பர் பிளேட்டை கழட்டி சேதமடைந்த வாகனத்தில் பொறுத்தியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தன்னுடைய வாகனம் இல்லை என சிவபாலன் போலீசாரிடம் முறையிட்டதற்கு, அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த சித்தாமூர் காவல் நிலைய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் பக்தவச்சலம், சிவபாலனை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று தேனீர் வாங்கி கொடுத்து போலீசார் தரும் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.

சிவபாலனும் வேறுவழியின்றி சேதமடைந்த வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். இருப்பினும் மாதாமாதம் சிவபாலன் சித்தாமூர் காவல் நிலையம் வந்து தனக்கு சொந்தமான வாகனத்தை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சித்தாமூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எரிசாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதில் பக்தவச்சலத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதை அறிந்தனர். மேலும் சித்தாமூர் காவல் நிலையத்தில் பழைய வழக்குகளையும், சிபிசிஐடி விசாரிக்க போவதாக அறிந்த பயந்துபோன பக்தவச்சலம் தானாகவே மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்த பக்தவச்சலம், சிவபாலனை தொடர்பு கொண்டு, ”உன்னுடைய வாகனம் கிடைத்துவிட்டது. காவல் நிலையம் வந்து எடுத்துக்கொள்” என கூறியுள்ளார். அதன்பேரில் காவல் நிலையத்திற்கு வந்த சிவபாலனிடம், அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளனர். அந்த வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் போலீஸ் லத்தி வைப்பதற்காக பிடி, போலீஸ் உபகரணங்கள் வைக்கும் பொட்டி உள்ளிட்டவைகள் பொறுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், தனது வாகனத்தை கடந்த 4 ஆண்டுகளாக பக்தவச்சலம் பயன்படுத்தி வந்ததை அறிந்தார். இதுகுறித்து சிவபாலன் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின்பேரில், பக்தவச்சலம் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

* பக்தவச்சலம் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். பல பகுதிகளில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு இவர் துணை போயிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்தாமூர் காவல் நிலையத்திலும், இவருக்கும் காவல்துறையினருக்கும் பல கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பக்தவச்சலம் ஓய்வு பெரும் சூழலில் அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிட்டதக்கது.

The post பறிமுதல் வாகனத்தை பயன்படுத்திய சித்தாமூர் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chittamur Investigation Division ,Seyyur ,Sivapalan ,Zameen Endathur ,Chengalpattu district ,Madurandakam ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...