×

கடந்த 2 நிதியாண்டுகளின் அறிவிப்புகளில் இந்து சமய அறநிலையத்துறை 95% பணிகள் நிறைவேற்றம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில், கடந்த 2 நிதியாண்டுகளில் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும், 2023-24ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை நிறைவேற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சீராய்வுக் கூட்டம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத்துறை கடந்த 3 சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின் போது 526 அறிவிப்புகளின் மூலம் 8,015 பணிகளை மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2023-24ம் ஆண்டிற்கான அறிவிப்புகளை விரைந்து நிறைவேற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,000 ஆண்டுகள் தொன்மையான 197 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருகால பூஜை திட்டத்தில் 200 கோயில்களை தேர்வு செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புறக் கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு 2,500 கோயில்களை தேர்வு செய்ய இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு 600 இணைகளுக்கு திருமணம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திருமணங்களின் தொடக்க நிகழ்வை முதல்வர் தலைமயைில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம்-காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 பக்தர்கள் அழைத்து செல்லும் வகையில் பயணத்திட்டம் வகுத்திட அறிவுறுத்தப்பட்டது. பெரியபாளையம், பவானியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திட ரூ.175 கோடியில்திட்டம் தயார் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post கடந்த 2 நிதியாண்டுகளின் அறிவிப்புகளில் இந்து சமய அறநிலையத்துறை 95% பணிகள் நிறைவேற்றம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities Department ,Minister ,Shekharbabu ,Chennai ,
× RELATED சென்னை ஓட்டேரி செல்லப்பிள்ளையார்...