×

தமிழ்நாட்டின் மரபு, கலாசாரத்தை பின்பற்றி உங்களுடன் இணைந்து பணியை மேற்கொள்வேன்: புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி

சென்னை: தமிழ்நாட்டின் கலாசாரம், மரபுகளை பின்பற்றுவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாவுக்கு உயர்நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் புதிய நீதிபதியை வரவேற்று பேசியபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் 52 வது தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதி கங்காபூர்வாலா, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். இரு சார்ட்டர்டு உயர் நீதிமன்றங்களை வழி நடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளது சாதாரணமானதல்ல.தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளதை நாம் அறிவோம்.

சமூக நீதி மாநிலமான தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கு பன்னெடுங்காலமாக நெருங்கிய தொடர்புள்ளது. புதிய தலைமை நீதிபதியை தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்கிறேன் என்றார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பதவிகளை, சமூக நீதியை பின்பற்றி நிரப்ப வேண்டும். மாவட்ட நீதித்துறை காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளும் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர். இதையடுத்து, ‘வணக்கம்’ என தமிழில் கூறி, ஏற்புரையை தொடங்கிய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, தனக்கு அளித்த வரவேற்புக்கு ‘நன்றி’ எனவும் தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, பல சான்றோர்களையும், கலை கலாசார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது. சென்னை உயர் நீதிமன்றம், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் தந்துள்ளது.

இளையவர்களும் அந்த பெருமையை தொடர்ந்து கொண்டு செல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் பெறப்படும்.பெர்சியாவில் இருந்து பார்சி மக்கள் குஜராத் கடற்கரையில் வந்து இறங்கினார்கள். அப்போது, அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் ஒரு டம்ளர் நிறைய பாலை வைத்து காட்டி, உங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று பார்சி மக்களிடம் கூறினார். உடனே அந்த பார்சி மக்களின் தலைவர் ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து பாலில் கலந்து பாலுடன் கலந்த சர்க்கரை போல உங்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து வாழ்வோம் என்றார். அதேபோல் நானும் பணியாற்றுவேன்.எவருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும். தமிழகத்தின் மரபு, கலாச்சாரங்களை பின்பற்றி உங்களை போல வாழ்வேன் என்று தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டின் மரபு, கலாசாரத்தை பின்பற்றி உங்களுடன் இணைந்து பணியை மேற்கொள்வேன்: புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Justice ,SV Gangapoorwala ,CHENNAI ,New Chief Justice ,Madras High Court ,S.V. Gangapoorwala ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...