×

2023-24ம் கல்வியாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையின் சிறப்பு பிரிவில் 3,363 பேர் சேர்ந்துள்ளனர்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: 2023-24ம் கல்வியாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையின் சிறப்பு பிரிவில் 3,363 பேர் சேர்ந்துள்ளனர் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் உள்ளன. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவுவை கடந்த மே 8ம் தேதி தொடங்கியது. http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக மே 22ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். அதன்படி 2,46,295 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து மே 25ம் தேதி தரவரிசை பட்டியலானது வெளியிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த சிறப்பு கலந்தாய்வில் 3,363 பேர் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் 1,502 பேர் ஆண்கள், 1,861 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கை (புதுமைப் பெண் திட்டம்) 738 என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து முதல் பொது கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரையிலும், இரண்டாம் பொது கலந்தாய்வு ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2023-24ம் கல்வியாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையின் சிறப்பு பிரிவில் 3,363 பேர் சேர்ந்துள்ளனர்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Directorate of College Education Information ,Chennai ,College Education Directorate information ,
× RELATED சென்னை அம்பத்தூரில் வீட்டில் ஏசி...