×

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் அவசர கூட்டம் தூத்துக்குடியில் ரூ.45.24 கோடியில் 421 தார் சாலை அமைக்க அனுமதி தீர்மானம் நிறைவேற்றம்

தூத்துக்குடி, ஜூன் 1:தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.45.24 கோடியில் 66 கிலோ மீட்டர் தொலைவுக்கான 421 தார் சாலை அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்குவது, ஜெயராஜ் ரோட்டில் கட்டப்பட்டுள்ள பலஅடுக்கு வாகன காப்பகம், பேருந்து பணிமனை ஆகியவற்றிற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டுவது, மணல் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின்போது பேசிய கவுன்சிலர்கள், ஆல் இந்திய ரேடியோ நிலையத்தின் சொத்துவரி நிலுவைத் தொகையை நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் தற்போது தண்ணீர் விநியோகம் குறைந்து இருப்பதாக புகார்கள் வருகின்றன. அதே நேரத்தில் தண்ணீரின் சுவையும் மாறி உள்ளது. இதனை சரி செய்வது எப்படி, நகரின் முக்கிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பாளை ரோட்டில் மாநகராட்சியின் நுழைவு வாயிலான மதுரை பைபாஸ் ரோட்டில் மின்விளக்குகள் இன்றி இருட்டாக உள்ளது. அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பக்கிள் ஓடை அருகே அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும்.

சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி 60,52வது வார்டுகளில் உள்ள குடோன்களில் மக்காச்சோளத்தில் இருந்து வரும் வண்டுகளால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தூத்துக்குடி அண்ணா சிலை அருகே கீரை வியாபாரி மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

அதன்படி 9 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒன்றிய அரசு கட்டிடங்களுக்கு சேவை வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் வரிவசூலில் தூத்துக்குடி 5வது இடத்தில் உள்ளது. நமது மாநகராட்சியில் ரூ.19 கோடி வரிபாக்கி நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்கு ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லை. அடியில் உள்ள தண்ணீரை எடுத்து வழக்கமான முறையில் சுத்திகரித்து வழங்கப்படுவதால் சுவையில் மாற்றம் உள்ளது. ஆழ்துளை கிணறும் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே முள்ளக்காடு, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. தாமிரபரணியில் தண்ணீர் வரும்போது வழக்கம் போல் மீண்டும் குடிநீர் வழங்கப்படும் பழைய பொருட்களை பெற்று தேவைப்படுவோர்க்கு உதவும் திட்டம் தற்போது 22 இடங்களில் செயல்படுகிறது. 5ம்தேதிக்கு பிறகு மாநகராட்சி, புதிய பஸ்நிலையம் பகுதிகளில் அத்திட்டம் தொடர்ந்து செயல்படும்.

எட்டயபுரம் ரோட்டில் 30 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தில் இருந்து விமான நிலையம் வரையும், எட்டயபுரம் ரோட்டில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி வரையும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் குடோன்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன மக்காச்சோளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 2030ம் ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தயார் நிலையில் மாநகராட்சி உள்ளது என்றார்.

The post மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் அவசர கூட்டம் தூத்துக்குடியில் ரூ.45.24 கோடியில் 421 தார் சாலை அமைக்க அனுமதி தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Mayor ,Jagan Periyasamy ,Thoothukudi ,Thoothukudi Municipal Corporation ,Commissioner ,Dinesh Kumar ,Mayor Jagan Periyasamy ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...