×

பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்: மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவு; பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்

சென்னை: பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தால் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2023-24 கல்வியாண்டில், மாணவ, மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரையிலும் பயணிக்கலாம்.

அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக்கல்லூரி, அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி(மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது போக்குவரத்து கழகத்தில் 2022-23 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும்படி அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவினை மீறி சீருடையிலுள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்திருக்ககும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உதவி மேலாளர் (வருவாய் – வடக்கு, தெற்கு) இது குறித்து தத்தம் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு தக்கவாறு அறிவுறுத்திடவும், அனைத்து கிளை மேலாளர்கள் தத்தம் பணிமனை நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்திட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்: மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவு; பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம்...