
சேலம்: சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்து 12 மணி நேரம் தவித்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் உள்ளது. நேற்று காலை 7 மணியளவில், அங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் முனகும் சத்தம் கேட்டது. அவ்வழியாக நடைபயிற்சி சென்றவர்கள், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மாவட்ட உதவி அலுவலர் சிவகுமார் தலைமையிலான வீரர்கள் சென்று, 100 அடி பள்ளத்தாக்கில் இறங்கி பார்த்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் காயங்களுடன் வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
சுமார் ஒருமணிநேரம் போராடி, அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், மீட்கப்பட்டவர் சேலம் மாவட்டம் சிவதாபுரம் அடுத்த பனங்காடை சேர்ந்த ரமேஷ் (43) என்பதும், தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் காலை ஏற்காடுக்கு சென்று சுற்றிபார்த்துவிட்டு, சேர்வராயன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், இரவு 8 மணியளவில் வீட்டிற்கு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்த போது அங்குள்ள திட்டில் மோதி, பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. 12 மணி நேரம் அங்கு போராடி வந்த அவரை, நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
The post ஏற்காடு மலைப்பாதையில் விபத்து 100 அடி பள்ளத்தில் 12 மணி நேரம் தவிப்பு: தொழிலாளி உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.