×

சுட்டெரித்து வரும் வெப்பத்தை தணிக்க ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அலைமோதிய கூட்டம்: குடும்பத்துடன் மக்கள் ஆனந்த குளியல்

 

திருப்பத்தூர்: நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பத்தை தணிக்க ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கூட்டம் அலைமோதியது. மேலும், குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டு மக்கள் பொழுதை போக்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் சதத்தை தாண்டி 104 டிகிரி வரை தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வீட்டில் வெக்கை தாங்க முடியாமல் இருந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை பின்புறம் ஜலக்காம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான சக்தி வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானை கோயில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அளவில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து இங்கு ஆனந்த குளியல் போட்டு விட்டு செல்வார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியவுடன் கடந்த இரண்டு மாத காலங்களாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. மேலும் பாறைகள் மட்டுமே நீர்வீழ்ச்சியில் காணப்பட்டது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும், தற்போது கோடை காலத்தில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் ஏராளமான பொதுமக்கள் நேற்று குளிப்பதற்காக கூட்டம் அலைமோதியது. மேலும், நேற்று காலை முதலே திருப்பத்தூர் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு குளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் பிரபு கூறுகையில், ‘தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பொதுமக்கள் குளிக்கும் போது பாதுகாப்பாக குளிக்க வேண்டும். பாறைகள் மேல் யாரும் ஏறக்கூடாது. பாறைகள் மேல் ஏறினால் அவர்கள் மீது வனத்துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் ஜலகாம்பாறை பாறை மீதும் காட்டுப்பகுதியிலும் செல்ல வேண்டாம்’ என கூறினார்.

The post சுட்டெரித்து வரும் வெப்பத்தை தணிக்க ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அலைமோதிய கூட்டம்: குடும்பத்துடன் மக்கள் ஆனந்த குளியல் appeared first on Dinakaran.

Tags : Jalakambarai Falls ,Tirupattur ,Jalakambara ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...