×

காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவது வரவேற்கத்தக்கது; அதிகாரிகளை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் நீர்நிலைகள் மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வரத்துக் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை வரும் ஜூன் 5-ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவிரிப் படுகையில் தூர்வாரும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதற்கு இது உதவும்.

காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மிகவும் வேகம் குறைவாக நடைபெற்று வருவது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்த சிக்கலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலையிட்டு, தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சென்று ஆய்வு செய்யவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக, தூர்வாரும் பணிகள் நிறைவடைவதை உறுதி செய்வதற்கு வசதியாக, காவிரி படுகையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமைப் பொறியாளர் நிலையிலான அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்;காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்; கூட்டுறவுத்துறை மூலம் உழவர்களுக்கு குறுகிய கால கடன்கள் தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Ramadas ,Chennai ,Chief Minister ,Mukherr Mukhera ,Kaviri Badi ,G.K. Stalin ,
× RELATED எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது...