
பெங்களூர் : மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடக அரசின் உரிமை என்று தெரிவித்து இருக்கும் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறி உள்ளார். தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அணை கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்ட சூழலில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் அமைச்சகமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இந்த பிரச்னையை காங்கிரஸ், பாஜக இரண்டுமே தேர்தல் பிரச்சனையாக்கின. இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்றதும் மேகதாது பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசின் உரிமை என தெரிவித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அனுமதி பெறுவது தொடர்பாக டெல்லிக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இந்த விவகாரத்தில் சமரசத்திற்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேகதாது அணை திட்ட விவகாரத்தில் முந்தைய பாஜக அரசு கர்நாடக மக்களை ஏமாற்றி விட்டதாக சிவக்குமார் சாடினார். இரு அணைகளையும் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
The post மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடக அரசின் உரிமை.. சமரசத்திற்கே இடமில்லை: துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்!! appeared first on Dinakaran.