
சென்னை: கடந்த 5 மாதங்களாக தேர்வு அறிவிக்கை வெளியாகவில்லை, ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 2012ம் ஆண்டிற்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2013-14ம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியை மேம்படுத்த முடியாது. இந்த அடிப்படையை உணர்ந்து அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.
The post 5 மாதங்களாக வெளியாகவில்லை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.