×

டெல்லி – சண்டிகர் வரை பயணித்து லாரி டிரைவர்களின் கவலையை கேட்டறிந்த ராகுல்: வீடியோவில் சுவாரஸ்ய பேட்டி

புதுடெல்லி: டெல்லி – சண்டிகர் வரை லாரியில் பயணித்த ராகுல்காந்தி, லாரி டிரைவர்களின் கவலையை கேட்டறிந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் அரியானா மாநிலம் முர்தாலில் இருந்து அம்பாலா வரை லாரியில் பயணம் செய்தார். இதுதொடர்பான வீடியோவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அதில், லாரி டிரைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிகிறார். ‘டெல்லி – சண்டிகர் வரை லாரியின் பயணித்தேன். லாரி டிரைவர்களுடன் சுவாரஸ்யமான உரையாடல் நடந்தது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் அவர்களுடன் செலவழித்தேன். இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் அவர்கள் இணைக்கிறார்கள். 24 மணி நேரமும் சாலையில் பயணிக்கும் அவர்கள் சாலை போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக உள்ளனர். இந்த தொழிலில் 5 ேகாடி பேர் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் டிரைவர்கள் ேதவைப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லாரியின் டிரைவர் ராஜ்பூத்திடம், நாட்டின் பணவீக்கம் குறித்து ராகுல்காந்தி கேட்டார். அதற்கு அவர், ‘டீசல் விலை உயர்ந்ததால், பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் வாங்கினால், உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கிறோம். கோதுமை வாங்கினால், சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கிறோம். தாபா, ஓட்டலில் லாரிகளை நிறுத்தி வைத்து தேநீர் மற்றும் உணவு அருந்தினால், காவல்துறையினரால் துன்புறுத்தப்படுகிறோம். எங்களது தொழிலில் குறைந்தளவே வருமானம் கிடைக்கிறது.

வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால், இந்த தொழிலுக்கு வந்துள்ளோம். தினமும் 12 மணி நேரம் வரை லாரியை ஓட்டுகிறோம். மாதம் 10,000 ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை. இந்த தொகை குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. விபத்து ஏற்பட்டால் எங்களை பாதுகாக்க காப்பீடு வசதி கூட இல்லை’ என்றார். தொடர்ந்து அம்பாலாவில் உள்ள குருத்வாரா மஞ்சி சாஹிப் வழியாக சென்ற மற்றொரு லாரியில் ராகுல்காந்தி சென்றார். அங்கு அவர்களுடன் அமர்ந்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post டெல்லி – சண்டிகர் வரை பயணித்து லாரி டிரைவர்களின் கவலையை கேட்டறிந்த ராகுல்: வீடியோவில் சுவாரஸ்ய பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Delhi ,Chandigarh ,New Delhi ,Rahul Gandhi ,Congress party ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...