×

பாரதி அரசு மகளிர் கல்லூரியில் 58 மாணவிகள் மதிப்பெண் சான்று மாயம்: பேராசிரியை போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: பிராட்வேயில் உள்ள பாரதி அரசு மகளிர் கல்லூரியில் 58 மாணவிகளின் மதிப்பெண் சான்றுகள் மாயமானது தொடர்பாக பேராசிரியை போலீசில் புகார் செய்துள்ளார்.சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் பாரதி அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு, வடசென்னை பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர மாணவிகள் படித்து வருகின்றனர். இதுபோல் பொன்னேரி, செங்குன்றம், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவிகளும் படிக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். வெளிமாவட்ட மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கின்றனர். கல்லூரியில் தற்போது பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரியில் சேரும்போது கொடுத்த 58 மாணவிகளின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாயமானது. இதையறிந்து மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியை ஹேமா முத்தியால்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய கட்டிடம் கட்டுவதால் சான்றிதழ்களை அலுவலகத்தில் உள்ள அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ளனர். ஆனால் பீரோ உடைக்கப்படவில்லை. மேலும் மதிப்பெண் சான்றிதழ்கள் திருடு போனதா?, 58 மாணவிகளின் சான்றிதழ் மட்டும்தான் காணவில்லையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதிப்பெண் சான்றிதழ் மாயமான சம்பவத்தால் மாணவிகள் குழப்பமடைந்துள்ளனர். கல்லூரியில் இந்தாண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடந்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாரதி அரசு மகளிர் கல்லூரியில் 58 மாணவிகள் மதிப்பெண் சான்று மாயம்: பேராசிரியை போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Bharti Govt Women's College ,Thandaiyarpet ,Bharti Govt. College for Women's ,Broadway ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு