×

திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், நெரும்பூர், களத்தூர் உள்ளிட்ட 4 குறு வட்டங்களுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. முதலாவதாக மாமல்லபுரம் குறு வட்டத்திற்கான ஜமாபந்தி தொடங்கியது. இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி முன்னிலை வகித்தார். முதல் நாளான நேற்றைய ஜமாபந்தியில் மாமல்லபுரம் குறு வட்டத்தில் அடங்கிய குன்னத்தூர், ஆரம்பாக்கம், நெய்குப்பி, வெங்கம்பாக்கம், பூந்தண்டலம், நரசங்குப்பம், நல்லூர், ஆமைப்பாக்கம், நத்தம் கரியச்சேரி, மாமல்லபுரம், கொக்கிலமேடு, எடையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 383 மனுக்கள் பெறப்பட்டன.

இதனை தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் நிதியுதவி தொகைக்கான ஆணைகளையும், இயற்கை மரணமடைந்த 38 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நிதியுதவியும் என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இதில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புஷ்பலதா, துணை தாசில்தார்கள் சையது அலி, ஜீவிதா, வட்ட வழங்கல் அலுவலர் முருகன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜமாபந்தி வரும் ஜூன் 9ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடக்க இருக்கிறது. கூடுவாஞ்சேரி: வண்டலூர் வட்டத்தில், வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பாக்கம் ஆகிய குறு வட்டங்கள் உள்ளன. இதில், வண்டலூர், கூடுவாஞ்சேரி இந்த குறு வட்டங்களுக்களுக்கான, வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார். இதில் பட்டா, சிட்டா, அடங்கல், பெயர் மாற்றம், திருத்தம், கிராம நத்தம் பட்டா, உட்பிரிவு, சர்வே, முதியோர், விதவை பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை நெடுங்குன்றம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வனிதாசீனிவாசன் உட்பட பொதுமக்கள் 99 பேர் மனுவாக கொடுத்தனர். இதில் அனைத்து மனுக்களும் பரிசீலனையில் உள்ளன.

திருப்போரூர்: திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய திருப்போரூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட 16 கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில், வட்டாட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

The post திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Tirukkalukunram ,Thirukkalukkunram ,Mamallapuram ,Nerumpur ,Kalatur ,Thirukkalukukunram ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...