×

இந்த கோப்பை டோனிக்கு என்று எழுதப்பட்டுவிட்டது, எனது தோல்வி டோனியிடம் என்றால் அதை மனமார ஏற்றுக்கொள்வேன்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

10 அணிகள் பங்கேற்ற 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நுழைந்தன. கோப்பைக்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் மழையால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் டே எனப்படும் நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் மும்பையின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்தது. தோல்வியின் பிடியில் இருந்த நிலையில் சிஎஸ்கே, ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடினர். சென்னை அணியுடன் இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்தபின் இரண்டாம் இடம்பிடித்த அணிக்காக பரிசுதொகையை பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், “பவுலிங் பேட்டிங் பீல்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டோம். நாங்கள் விளையாடியபோது, மனமார விளையாடினோம். கடைசிவரை போராடினோம். இவை அனைத்தையும் நினைத்து பெருமிதமாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் ஒரு குறிக்கோள் என்னவென்றால், வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதை ஒன்றாகவே கொண்டாடுவோம். இன்று நாங்கள் விளையாடிய ஆட்டத்திற்கு எந்தவித காரணமும் சொல்லப்போவதில்லை. சிஎஸ்கே அணி எங்களைவிட சிறப்பாக விளையாடியதால் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள். பேட்டிங்கில் நாங்களும் நன்றாக விளையாடினோம்.

குறிப்பாக சாய் சுதர்சனுக்கு இந்த இடத்தில் எனது பாராட்டுகளை சொல்ல வேண்டும். இளம் வயதில், இப்பேர்ப்பட்ட அழுத்தம் நிறைந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் பக்க பலமாக இருந்து வருகிறோம். அவர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். அவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது அவர்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசு. இந்த சீசன் முழுவதும் மோகித் சர்மா, ரஷித் கான், முகமதுஷமி என அனைவரும் வேண்டிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு கொடுத்தார்கள்.

அவர்களுக்கும் பாராட்டுக்கள் சென்றாக வேண்டும்.(டோனி குறித்து) டோனி கோப்பையை வென்றது நினைத்து பெருமிதமாக உணர்கிறேன். அவர் வெல்ல வேண்டும் என்று விதியில் எழுதப்பட்டு இருக்கிறது. நான் தோல்வியை தழுவ வேண்டும் என்றால், அது டோனியிடம் என்று வரும் பொழுது தாராளமாக தோல்வியை ஏற்றுக்கொள்வேன். நல்லவர்களுக்கு எப்போதும் நல்ல விஷயம் நடக்க வேண்டும். நான் கண்டதிலேயே மிகச் சிறந்த மனிதர் அவர். கடவுள் அனைவருக்கும் இரக்கத்துடன் இருக்கிறார். இன்று என் மீதும் இரக்கம் காட்டினார். ஆனால் இன்று டோனியின் இரவு. அவருக்காக இன்று மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என்றார்.

The post இந்த கோப்பை டோனிக்கு என்று எழுதப்பட்டுவிட்டது, எனது தோல்வி டோனியிடம் என்றால் அதை மனமார ஏற்றுக்கொள்வேன்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tony ,Hardik Pandya Resilience ,IPL series ,Gujarat Titans ,Chennai Super ,
× RELATED ரூ.4 கோடியில் சிஎஸ்கே அணியில் நீடிக்கும் டோனி?