×

திருவனந்தபுரம் மத்திய சிறையில் மட்டன் குழம்பு குறைந்ததால் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கைதி

திருவனந்தபுரம், மே 30:திருவனந்தபுரம் மத்திய சிறையில் மதிய உணவின்போது கொடுக்கப்பட்ட மட்டன் குழம்பு குறைந்து போனதால் சிறை அதிகாரிகள் மீது கைதி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவனந்தபுரம் பூஜப்புராவில் மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் உள்பட 1300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதிய உணவுடன் மட்டன் குழம்பு வழங்கப்படுவது உண்டு. நேற்று முன்தினம் வழக்கம் போல மதிய உணவின் போது கைதிகளுக்கு மட்டன் குழம்பு கொடுக்கப்பட்டது.

அப்போது வயநாட்டைச் சேர்ந்த முகம்மது பைஜாஸ் (42) என்ற கைதி தனக்கு மட்டன் குழம்பு குறைவாக கொடுக்கப்பட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டார். இது குறித்து அறிந்த துணை கண்காணிப்பாளர் உள்பட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சிறை அதிகாரிகள் மீது பைஜாஸ் திடீரென தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் துணை கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிறை அதிகாரிகள் பூஜப்புரா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பைஜாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவனந்தபுரம் மத்திய சிறையில் மட்டன் குழம்பு குறைந்ததால் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கைதி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Central Jail ,Thiruvananthapuram Central Jail ,
× RELATED புழல் மத்திய சிறைச்சாலை எதிரே பழுதான குடிநீர் பைப்லைன் சீரமைப்பு