×

பாஜவுடன் நட்பு, அதிமுகவுடன் முறிவு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறும் பாமக

சென்னை: பாஜவுடன் நட்பு பாராட்டும் பாமக, அதிமுக தேர்தல் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தெரியாமல் பாமக தலைமை குழப்பத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்ேபாது பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இதைத்தவிர ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்பட்டது. அப்போது அதிமுக கூட்டணியில் பாஜ, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் தேனி தொகுதியைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது.

இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே மோதல் நிலவியது. அதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. அதில் 5 இடங்களில் வெற்றி பெற்றது.ஆனாலும் இது குறைவான தொகுதி என்பதால், கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு வேலை செய்யவில்லை என்று பாமக குற்றம்சாட்டியது. ஆனால் பாமக பேச்சைக் கேட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதால்தான் அதிமுக கூட்டணி தென் மாவட்டங்களில் படுதோல்வியை சந்தித்தது என்று அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் இரு தரப்பு தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன.

அதேநேரத்தில் திமுக அரசு செய்துவரும் பல்வேறு திட்டங்களை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் பாராட்டி வந்தனர். அதேநேரத்தில் ஒன்றிய அரசின் பல திட்டங்களை விமர்சனம் செய்து வந்தனர். இதனால் அதிமுக தலைவர்கள் பாமக மீது கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் விரும்புகின்றனர். அதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் முக்கியமான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி மட்டுமே கலந்து கொண்டார்.

மேலும் டெல்லியில் பாஜ தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் பாஜ கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும் என்று விரும்பி வரும்நிலையில், அந்நிகழ்வில் அன்புமணி கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பாமக, பாஜவுடன் இணக்கமாக செல்வது தமிழக அரசியலில் பாமக இன்னும் குழப்பத்தில் இருப்பதையே காட்டுவதாக அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என்று கூறி வந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

குறிப்பாக ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கிடையே கூட்டணி தொடர்பான மோதல் கருத்து தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்த முறைகேடு தொடர்பான வழக்கில் இருந்து தன்னை காத்துக் கொள்ளவே பாஜ ஆதரவு நிலைப்பாட்டை அன்புமணி எடுத்துள்ளதாகவும், உள்ளூரில் அரசியலுக்காக அதிமுகவை எதிர்ப்பதாகவும் அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எப்படியோ கட்சியின் நிலைப்பாடு குழப்பமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாமகவினரும் தவித்து வருகின்றனர்.

The post பாஜவுடன் நட்பு, அதிமுகவுடன் முறிவு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறும் பாமக appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,CHENNAI ,Bamako ,Dinakaran ,
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...