×

போராட்ட கூடாரம் அகற்றம், கைதானோர் நள்ளிரவில் விடுவிப்பு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது வழக்கு: பாஜ எம்பியை கைது செய்யக்கோரி மகளிர் ஆணைய தலைவி கடிதம்

புதுடெல்லி: டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், பாஜக எம்பியை கைது செய்யக்கோரி டெல்லி போலீசாருக்கு மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி, மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் போராட்ட அமைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர்கள் நேற்று இரவு வரை (கிட்டத்தட்ட 10 மணி நேரம்) தடுத்து வைக்கப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர். அப்போது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் (பாஜ எம்பி) கலந்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது’ என்றார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி பிரிவுகள், 147, 149, 186, 188, 332, 353, பிடிபிபி சட்டத்தின் பிரிவு கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட்டன. நேற்றிரவு போராட்ட களத்திற்கு வந்த 8 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், ‘பாஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர்களை விடுவிக்க வேண்டும்’ எனக் கோரி டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post போராட்ட கூடாரம் அகற்றம், கைதானோர் நள்ளிரவில் விடுவிப்பு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது வழக்கு: பாஜ எம்பியை கைது செய்யக்கோரி மகளிர் ஆணைய தலைவி கடிதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Delhi ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கிய...