×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச்; ஸ்லோன் ஸ்டீபன்ஸ் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றார். முதல் சுற்றில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவசெவிச்சுடன் (24 வயது, 114வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (36 வயது, 3வது ரேங்க்) 6-3, 6-2 என்ற கணக்கில் முதல் 2 செட்களையும் எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 3வது செட்டில் கோவசெவிச் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. எனினும், அதில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்த ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-1) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 2 மணி, 26 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் இங்கிலாந்தின் கேமரான் நோரி (27 வயது, 13வது ரேங்க்) 7-5, 4-6, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் பெனாய்ட் பேரை (34 வயது, 149வது ரேங்க்) 3 மணி, 33 நிமிடம் போராடி வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (30 வயது, 30வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை (31 வயது, 16வது ரேங்க்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச்; ஸ்லோன் ஸ்டீபன்ஸ் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : French Open ,Djokovich ,Sloane Stephens ,Paris ,French Open Grand Slam ,French Open Tennis ,Dinakaran ,
× RELATED பார்போரா ஜாஸ்மின் பலப்பரீட்சை