×

வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் பஸ் கால அட்டவணை தெரியாமல் பயணிகள் தவிப்பு: கோடை விடுமுறை முடிந்து திரும்புகிறவர்கள் திண்டாட்டம்

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக முன் பதிவு மையத்தில் பஸ்களுக்கான கால அட்டவணை சரியாக இல்லாததால், பயணிகள் திண்டாடி வருகிறார்கள். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. முதல் பிளாட்பாரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் தென்காசி, பாபநாசம் போன்ற ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் உள்ளன. 2 வது பிளாட்பாரத்தில் திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திருச்செந்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்களும், 3 வது பிளாட்பாரத்தில் புதுக்கடை, தேங்காப்பட்டணம், குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், 4 வது பிளாட்பாரத்தில் கன்னியாகுமரி, உவரி, அஞ்சுகிராமம், கூட்டப்புளி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களும் உள்ளன. இதில் 2 வது பிளாட்பாரத்தில், அரசு விரைவு போக்குவரத்து கழக டிக்கெட் முன் பதிவு மையம், அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள், மாற்று திறனாளிகள் ஓய்வு அறை உள்ளிட்டவை உள்ளன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக டிக்கெட் முன் பதிவு மையத்துக்கு வெளிப்புறம் அரசு விரைவு பஸ்களின் கால அட்டவணை பட்டியல் ஒட்டப்பட்டு இருந்தது.

தற்போது இந்த பட்டியல் கிழிந்தும், அழுக்கடைந்தும் பஸ்களின் தடம் எண், பயண நேரம் உள்ளிட்டவை தெரியாத வகையில் சிதைந்துபோய் உள்ளது. இதனால் டிக்கெட் முன் பதிவு செய்ய வருபவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் டிக்கெட் முன் பதிவுக்கு வந்தால், பயண கால அட்டவணையை பார்த்ததும் அதிர்ச்சி அடையும் நிலை உள்ளது. பஸ்களின் தடம் எண், பயண நேரம் தெரிந்தால் தான் முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும். அது குறித்து தெரியாமல் டிக்கெட் முன்பதிவு பணியாளரிடம் தான் இது குறித்து கேட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலைய டிக்கெட் முன்பதிவு மையத்தில் தெளிவான வகையில் பஸ்களின் விபர அட்டவணை ஒட்டப்பட வேண்டும் என்றும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாற்று திறனாளிகள் அறை திறக்க வேண்டும்: வடசேரி பஸ் நிலையத்தில் மாற்று திறனாளிகள் ஓய்வு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறை பூட்டியே கிடக்கிறது. மாற்று திறனாளிகள் செல்ல முடியாத வகையில் பொருட்கள் வைத்து அடைத்துள்ளனர். எனவே உடனடியாக அதை அகற்றி, மாற்று திறனாளிகள் ஓய்வு அறையை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் பஸ் கால அட்டவணை தெரியாமல் பயணிகள் தவிப்பு: கோடை விடுமுறை முடிந்து திரும்புகிறவர்கள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vadseri Bus Station ,Nagarko ,Government Quick Transport Corporation Pre-Registration Centre ,Ticket Booking Centre ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்