×

மீஞ்சூர் அருகே இறால் பண்ணையால் நிலத்தடி நீர் மாசு; விவசாயம், குடிநீர் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் புகார்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் தனியார் சார்பில் இறால் பண்ணை இயங்கி வருகிறது. விளை நிலங்களாக இருந்த இடம், இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டு குட்டைகளில் இறால்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் விடப்படுகிறது. இதனால் குடிநீர் மாசடைகிறது. மேலும், நிலத்தடி நீரும் மாசடைகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வன்னிப்பாக்கத்தில் இருந்து 25 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இங்குள்ள இறால் பண்ணைகள் அருகில் உள்ள ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இறால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இந்த கிணற்றுக்குள் புகுந்து தண்ணீர் மாசடைகிறது. இந்த நீரை குடித்த கால்நடைகளும் இறந்துள்ளது. குழந்தைகளுக்கும் உடல் நல குறைவு ஏற்படுகிறது. இதுகுறித்து பொன்னேரி வட்டாட்சியர், சார் ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு இறால் பண்ணைகளை அகற்றி சுகாதார குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்து போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்றனர்.

The post மீஞ்சூர் அருகே இறால் பண்ணையால் நிலத்தடி நீர் மாசு; விவசாயம், குடிநீர் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Vannipakkam ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு