×

3 கி.மீ. தூரத்துக்கு 300 ரூபாய் வசூல்; திருவள்ளூர் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்களில் கட்டண கொள்ளை: பயணிகள் கோரிக்கை!

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் ஏராளமான ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றது. திருவள்ளூர் ரயில் நிலையம் முதல் தேரடி வரையிலும் திருவள்ளூர் காமராஜர் சிலையில் இருந்து பேரம்பாக்கம், கடம்பத்தூர், பட்டரை பெருமந்தூர், பாண்டூர் மற்றும் திருப்பாச்சூர் பகுதிகளுக்கும் தினமும் 500 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகரை ஒட்டியுள்ள பூங்கா நகர், ராஜாஜிபுரம், காக்களூர் மற்றும் புட்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மருத்துவம், கல்வி, பணி நிமித்தமாக பல கி.மீ. துாரத்தில் அமைந்துள்ள திருவள்ளூருக்கு வரவேண்டும்.

இந்த பகுதிகளில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் ஷேர் ஆட்டோக்களில் வருகின்றனர். இவற்றை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் மீட்டர் போடாமல், கூடுதல் கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் அடாவடியாக கேட்பதாக தெரிகிறது. இதை தட்டிக் கேட்டால் அவர்களை மிரட்டியும் ஆட்டோக்கள் வராது என கறாராக கூறி விடுகிறார்களாம். இதன்காரணமாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஜவஹர் நகர் பகுதிக்கு சுமாராக 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

ஆவடி புறவழிச்சாலையில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஜவஹர் நகருக்கு நேற்று வந்த ஆட்டோ ஓட்டுனர் 200 ரூபாய் வசூலித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், திருவள்ளூர் நகரில் உள்ள பூங்கா நகர், காக்களூர், ஜெயா நகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருந்து 3 முதல் 4 கி.மீ. துாரத்தில்தான் உள்ளது. ஆனால் இப்பகுதிக்கு இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுனர்கள், நேரம், சூழ்நிலையை பயன்படுத்தி ரூ.150 முதல் 300 வரை வசூலிக்கின்றனர்.

பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் வேறு வழியின்றி ஆட்டோக்காரர்கள் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். மீட்டர் போட்டு ஆட்டோக்களை இயக்க கூறினாலும் கண்டுகொள்வதில்லை. காவல் துறையினரும் போக்குவரத்து துறையினரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவள்ளூரில் இயக்கப்படும் ஆட்டோக்களை மீட்டர் போட்டு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

The post 3 கி.மீ. தூரத்துக்கு 300 ரூபாய் வசூல்; திருவள்ளூர் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்களில் கட்டண கொள்ளை: பயணிகள் கோரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Theradi ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...