×

வத்திராயிருப்பு பகுதியில் தொடர் கதை பாதாளத்தை நோக்கி செல்லும் தேங்காய் விலை-ஏற்றுமதி பாதிப்பால் வேதனையில் விவசாயிகள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.வத்திராயிருப்பு, கூமாபட்டி, புதுப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை, நெடுங்குளம் சேது நாராயணபுரம் தாணிப்பாறை அடிவாரம் மந்தி தோப்பு மகாராஜபுரம் மாத்தூர் ரெங்கபாளையம் கோட்டையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 8000க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை விவசாயம் உள்ளது. தென்னையை பெற்றால் இளநீரு பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்ற பழமொழி மாறி தென்னையைப் பெற்றால் கண்ணீர் என்ற நிலை தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு பகுதியை பொறுத்தவரை நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் உள்ளது. தென்னை விவசாயம் வைத்துள்ள விவசாயிகள் தென்னைக்கு உரம் வைப்பதில் இருந்து உழவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இருந்து வருகிறது. தென்னை விவசாயத்திற்கு நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். தேங்காய் பறிப்பு வருடத்திற்கு 8 முதல் 9 பறிப்பு பறிக்கப்படுகிறது. தேங்காய் பறிப்பிற்கு கூலி தேங்காய் ஒன்று சேர்ப்பதற்கு கூலி உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்களாக வருகிறது.

அதோடு தென்னையை தாக்கக்கூடிய காண்டாமிருக வண்டு பூச்சி உள்ளிட்டவை ஒரு பக்கம் தாக்கி வந்தாலும் அதனை தடுக்கும் முறையை வேளாண்மை அதிகாரிகள் வருகை தந்து அதற்கான வழிமுறைகளை சொல்லி நோய் தாக்குதல் ஏற்படுவதை தடுக்கும் முறைகளை சொல்லி அதற்கான உரம் உள்ளிட்டவை மருந்துகள் ஆகியவை வழங்குகின்றனர்.

கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக தேங்காயின் விலை ரூ.6க்கு விற்பனையாகிறது. வியாபாரிக்கு தேங்காய் விற்பனை செய்யும் போது ரூபாய் 6க்கு வாங்குகிறார். அதே வேளையில் தேங்காய் நூற்றுக்கு 15 காய் லாபகாய் என்ற முறையில் தென்னை விவசாயிகள் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சியால் சிறு, குறு தென்னை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நிரந்தரமாக தேங்காய் லாபக் காய் இல்லாமல் அரசே நேரடியாக விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

இதுகுறித்து வத்திராயிருப்பு தேங்காய் வியாபாரி மாரியப்பன் கூறுகையில், ‘‘நான் 13 வருடங்களுக்கு மேலாக தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். இந்த அளவிற்கு விளைவிழிச்சி இருந்தது இல்லை தற்போதைய நிலையில் தேங்காய் விலை ரூபாய் ஆறு இருப்பதால் அதிக காய் வெட்டு உள்ள விவசாயிகள் விலை கூட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேங்காய் விலை ரூபாய் ஆறு இருப்பதால் தென்னை விவசாயிகள் மிகுந்த கவலையுடன் இருந்து வருகிறார்கள்.

ராஜஸ்தான், குஜராத், டெல்லி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கு வத்திராயிருப்பு பகுதியில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடு சென்று கொண்டே இருக்கும். தற்போது வட மாநிலங்களிலும் தேங்காய் வேண்டாம் என்று கூறி அவர்களும் தேங்காயை உரித்து ரூபாய் ஆறுக்கு கேட்கிறார்கள் தென்னை விவசாயிகளிடம் தேங்காய் நூற்றுக்கு 15 காய் லாபக் காய் என்ற பெயரில் வாங்குவதை வைத்து தேங்காயை உரித்து வட மாநிலங்களுக்கு அனுப்புகிறோம்.

தேங்காய் விவசாயிகளிடம் வாங்கி தேங்காய் உரித்து அனுப்புவது வரை செலவினங்கள் சரியாக உள்ளது. இதில் சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படும் தற்போது தேங்காய் பேட்டையில் 3 லட்சம் தேங்காய் வரை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேக்கமடைந்துள்ளது. வட மாநிலங்களில் தேங்காய் வாங்குவது குறைந்ததால் தேங்காய் விலை வீழ்ச்சியாகி உள்ளது என்றார்.

தென்னை விவசாயிகள் கூறுகையில், தேங்காய் விலை மட்டுமே நாளுக்கு நாள் விலை குறைந்து வருகிறது. மற்ற பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தென்னை விவசாயிகளை இந்த அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளதால் தேங்காய் விலை உயர்வு செய்து அரசே கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தேங்காயை வாங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

The post வத்திராயிருப்பு பகுதியில் தொடர் கதை பாதாளத்தை நோக்கி செல்லும் தேங்காய் விலை-ஏற்றுமதி பாதிப்பால் வேதனையில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Varaiyiri ,Varayiri ,Vadruyiru ,Kumapatti ,Pudupatti ,Kanjapuram ,Plivakal Dam ,Nadungulam ,
× RELATED வத்திராயிருப்பு பகுதியில் பருவமழை...