×

பொள்ளாச்சி பகுதியில் கோடை மழை குறைவு கிராமங்களில் குளம், குட்டைகள் வேகமாக வற்றும் அபாயம்-விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் குளம், குட்டைகள் மற்றும் ஆங்காங்கே சிறு தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைகாலங்களில் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து தடுப்பணை மூலமாக சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் உயர்ந்து விசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

இதில், ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆழியார், சமத்தூர், கோமங்கலம், பொன்னாபுரம், வடக்கிபாளையம், ராமபட்டிணம், நெகமம் உள்பட பல கிராமங்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும், 150-க்கும் மேற்பட்ட குளம் மற்றும் குட்டைகளும் உள்ளன. மழைகாலங்களில் தடுப்பணை, குளம், குட்டைகளில் தண்ணீர் வெகுவாக உயர்ந்து காணப்படும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால், குளம், குட்டைகள் மற்றும் பல்வேறு தடுப்பணைகளிலும் பல மாதமாக தண்ணீர் தேங்கியிருந்தது. மேலும், அந்நேரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால், அருகே உள்ள விவசாய நிலங்கள் செழிப்படைந்த நிலை ஏற்பட்டது.

இந்த ஆண்டில், ஜனவரி மாதம் இறுதியிலிருந்து சில மாதமாக மழையின்றி, வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. சில வாரத்துக்கு முன்பு அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டு கோடை மழை இல்லாமல் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமானது. அதிலும், அக்னி நட்சத்திர வெயிலின தாக்கம் கடந்த மூன்று வாரமாக அதிகமாக இருந்துள்ளது.

இதனால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தடுப்பணை மற்றும் குளங்களில் தண்ணீர் குறைந்தது. அதிலும் சில தடுப்பணைகளில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. மேலும், விவசாய தேவைக்கு அமைக்கப்பட்ட குட்டைகளிலும் தண்ணீர் வற்றிய நிலையில் உள்ளது. கிராமங்களில் உள்ள நீர்தேக்க பகுதிகளில் தண்ணீர் வற்றியுள்ளதுடன், தற்போது போதுமான கோடை மழை இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆற்றோர பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோடை மழை போதியளவு இல்லாமல் பொய்த்ததால், அடுத்து தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி, விளை நிலங்களில் மானாவாரி பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதனால், அடுத்து மழை எப்போது பெய்யும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

The post பொள்ளாச்சி பகுதியில் கோடை மழை குறைவு கிராமங்களில் குளம், குட்டைகள் வேகமாக வற்றும் அபாயம்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Pollachi North, South ,Animalayan Union ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!