×

கூடலூர் தொடங்கி தேவாரம் வரை 18ம் கால்வாயில் மராமத்து பணிகள் எப்போது?

*உடனடியாக தொடங்கிட விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

*மஞ்சளாறு வடிநிலக்கோட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

தேவாரம் : கூடலூர் தொடங்கி தேவாரம் வரை உள்ள 18ம் கால்வாயில் உள்ள அடைப்புகள், செடி கொடிகளை அகற்றிட மஞ்சளாறு வடிநில கோட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்தமபாளையம், போடி வட்டத்தில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 1999-ம் ஆண்டு, அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது 18ம் கால்வாய் (பிடிஆர் பழனிவேல் ராஜன் கால்வாய்) திட்டம்.

இந்த திட்டத்தின்படி லோயர்கேம்ப் தலைமதகிலிருந்து 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. தற்போது சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறுவரை 14.10 கிலோமீட்டர் நீட்சி என 54.90 கி.மீ, வரை செல்கிறது 18ம் கால்வாய். இக்கால்வாய் தண்ணீரை கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலச்சேரி, தே.மீனாட்சிபுரம், சங்காபுரம், சிலமலை ராசிங்காபுரம், டொம்புச்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 51 கண்மாய்களுக்கு நீர் நிரப்பி, நிலத்தடி நீர் பெருகுவதோடு, நேரடியாக 4,614 ஏக்கர் நிலமும், நீட்டிப்பு கால்வாயில் 2225 ஏக்கர் என 6839 ஏக்கர் பாசன வசதி பெறும்.

மேலும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் மறைமுக நிலத்தடி நீர் உயர்வு பெறும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அக்டோபர் முதல் தேதிக்குப்பின் பெரியாறு மற்றும் வைகை அணையின் இருப்புநீர் 6250 மில்லியன் கனஅடியாக இருந்தால், 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை முல்லையாறு பாய்கிறது. அதேநேரத்தில் கிழக்கு பகுதியாக உள்ள தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களில் எந்த விதமான ஆற்றுப்படுகையும் இல்லை. இந்த ஊர்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் 18ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் பெரியாறு அணையின் நீர்மட்டம் 126 அடியை எட்டும்போது அக்டோபர் மாதத்தில் தண்ணீர் திறப்பது வழக்கமாக உள்ளது. கடந்த வருடம் அணையின் நீர்மட்டம் மிக குறைவாகவே இருந்ததால் தண்ணீர் திறக்கவில்லை. எனவே 18ம் கால்வாயில் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக கூடலூர் தொடங்கி, கம்பம், கோம்பை சிக்கிச்சியம்மன்மேட்டில் இருந்து தேவாரம் சுத்தகங்கை வரை பெரும்பாலான இடங்களில் ஷட்டர்கள் திருடப்பட்டுள்ளது. தண்ணீர் வந்து செல்லக்கூடிய சைபண்டுகள் (மோதி வேகத்தை அதிகரிக்கும் வளைவுகள்) மிக மோசமாக பழுதடைந்துள்ளது. முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. பல இடங்களில் இரண்டு வருடமாக தண்ணீர் வராதநிலையில் மேடுகள் மேவிக்கிடக்கின்றன. கற்களும், மண்ணும் கலந்துள்ளதால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

இதனால் திறக்கப்படக்கூடிய தண்ணீர் முழுவதுமாக குளங்களுக்கு வராது. ஷட்டர்கள், தண்ணீர் திறந்துவிடக்கூடிய மதகுகள் போன்றவை இல்லாததால் தண்ணீர் வீணாக கூடிய நிலை உள்ளது. எனவே உடனடியாக 18ம் கால்வாயை பராமரிக்ககூடிய மஞ்சளாறு வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தற்போது மழை இல்லாத காலங்களிலேயே எங்கெல்லாம் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டுமோ, அங்கெல்லாம் சரி செய்ய வேண்டும். முட்புதர்கள் அகற்றப்பட வேண்டும். கூடலூர் முதல் தேவாரம் வரை 40 கிலோ மீட்டரிலும் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு உரிய நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவாரம், தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே, இப்பகுதி விவசாயிகளின் நலன்கருதி 18ம் கால்வாயை பராமரிக்ககூடிய மராமத்துப் பணிகளை அரசு அதிகாரிகள் உடனடியாக செய்ய வேண்டும்’’ என்றனர்.

முட்புதர்கள் அகற்றப்படணும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘40 கிலோமீட்டரில் பயணிக்க கூடிய தண்ணீர் எந்த இடத்திலும் தேங்க கூடாது, வீணாக கூடாது. அபஇப்போது மழை பெய்யவில்லை. இப்போது திறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதேநேரத்தில் மஞ்சளாறு வடிநில கோட்ட அதிகாரிகள், இதனை ஒவ்வொரு வருடமும் பராமரிக்க தமிழக அரசிடம் தேவையான நிதியை கேட்டு பெற வேண்டும். பொக்லைன் மூலம் பள்ளம், மேடுகள் சரி செய்ய வேண்டும். முட்புதர்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post கூடலூர் தொடங்கி தேவாரம் வரை 18ம் கால்வாயில் மராமத்து பணிகள் எப்போது? appeared first on Dinakaran.

Tags : 18th canal ,Cuddalore ,Devaram ,Kudalore ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...