×

ஊட்டி அருகே தொட்டண்ணி கிராமத்தில் மண், நீர்வள பாதுகாப்பு மைய உதவியுடன் வெள்ளை மொட்டு காளான் சாகுபடி

ஊட்டி : ஊட்டி அருகே தொட்டண்ணி கிராமத்தில் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் வழிகாட்டுதலுடன் நீலகிரியின் காலநிலைக்கு ஏற்ப வெள்ளை மொட்டு காளான் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவனம், நீலகிரியில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளான் வளர்ப்பு மூலம் சுழல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது.

முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய காளான் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய சுதீர் குமார் அன்னேபு, ஊட்டி மையத்தின் தலைவர் முனைவர் சுந்தராம்பாள் தலைமையிலான ஆய்வுக் குழு, ஆய்வு செய்து நீலகிரி மாவட்டத்தில் உண்ணக் கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களை பயிரிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தொிவித்தது.

குறைந்தபட்ச நீர் தேவை, குறைந்த ஆற்றல் நுகர்வு, செங்குத்து இடத்தைப் பயன்படுத்துதல் மற்றும் விவசாய கழிவுப் பொருட்களை வளரும் அடி மூலக்கூறாகப் பயன்படுத்துதல், காளான் வளர்ப்பு ஆகியவை விவசாயத்தில் காலநிலை தொடர்பான மாறுபாடுகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் ஆற்றலை கொண்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி பார்ம் ப்ரெஷ் ஆதரவுடன் கடந்த ஆண்டு காளான் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஊட்டி அருகே தொட்டன்னி கிராமத்தை சேர்ந்த பயனாளி விவசாயிகள் விமல் மற்றும் செல்வமணி ஆகியோர் தங்களது முதல் பயிரான காளான்களை வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளனர்.

ஊட்டி மையத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன், இப்போது விவசாயிகள் பிரதான் மந்திரி க்ரிஷி சஞ்சய் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் விவசாயிகளை மையமாக கொண்ட தொடக்க தொழில்களாக இந்த செயல்பாட்டை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காய்கறி பயிர்களை பயிரிடுவதற்கு தொழு உரம் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், காளான் பயிருக்கு பிறகு உற்பத்தியாகும் கழிவுகளை தொழு உரத்திற்கு மாற்றாக பயன்படுத்துவதன் மூலம் சுழல் உயிர் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

கிராமப்புறங்கள் அதிக மதிப்புள்ள சத்தான உணவை வழங்குவதோடு, விவசாயிகள் மட்டத்தில் காளான் வளர்ப்பை முதன்மை விவசாயத்துடன் ஒருங்கிணைத்தால் காய்கறி சாகுபடியில் இடுபொருட்கள் செலவை குறைக்க முடியும். ஊட்டியில் உள்ள மையத்தில் காளான் வளர்ப்பு மற்றும் மண்வள பாதுகாப்பில் அதன் சாத்தியமான பயன்பாடுகள் மூலம் வழங்கப்படும் காலநிலை நேர்மறையான பதில்களை கண்டறிய ஆராய்ச்சி சோதனைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

The post ஊட்டி அருகே தொட்டண்ணி கிராமத்தில் மண், நீர்வள பாதுகாப்பு மைய உதவியுடன் வெள்ளை மொட்டு காளான் சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Thottani ,Ooty ,Tottani ,Soil and Water Resources Conservation Center of India ,Nilgiri ,Thottani village ,Soil and Water Resources Conservation Center ,Dinakaran ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்