×

குலசேகரத்தில் தினமும் 5 டன் குப்பை குவிகிறது திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முட்டுக்கட்டை-செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

குலசேகரம் : குலசேகரம் பேரூராட்சி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். நகர பகுதிக்கு இணையான போக்குவரத்து நெருக்கடி மற்றும் வணிக நிறுவனங்களின் நெருக்கம் போன்றவற்றால் பரபரப்பாக இயங்கும் பகுதி. குலசேகரத்தின் தொடக்க பகுதியான கல்லடிமாமூடு முதல் கான்வென்ட் சந்திப்பு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைவெளி இல்லாமல் சிறிய, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் உள்ளது. குலசேகரத்தின் மையபகுதியில் குலசேகரம் தினசரி சந்தை உள்ளது. இதைபோன்று மூன்று மருத்துவ கல்லூரிகள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என குலசேகரம் பகுதி முழுவதும் நிரம்பியிருப்பதால் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூர் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

குலசேகரத்தில் மட்டும் 8 திருமண அரங்குகள் உள்ளது. அதோடு மலைபகுதிகள், மலையோர பகுதிகள் வாழும் மக்கள் தங்களது விவசாய விளைபொருட்களை குலசேகரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழல்களால் திருவட்டார் தாலுகாவில் போக்குவரத்து நெருக்கம், மக்கள் நெருக்கம் என அதிக மக்கள் புழங்கும் பகுதியாக குலசேகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குலசேகரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதாலும் வணிக நிறுவனங்கள் நிறைந்து இருப்பதாலும், குலசேகரத்தில் தினசரி சந்தை செயல்படுவதாலும் இங்கு குப்பைகள் குவிவது சர்வசாதாரணமானது. குலசேகரத்திற்கு மிக அருகில் சுற்றுலா மையங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிபாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் புகழ்பெற்ற ஆன்மீக தலங்கள் இருப்பதால் குலசேகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இதனால் மட்கும், மட்காத குப்பைகள் வீதிகளில் குவிவது அதிகரித்து வருகிறது. இவைகளை அகற்றி தூய்மைபடுத்துவதில் தூய்மை பணியாளார்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாள் ஒன்றிற்கு சராசரியாக 5 டன் குப்பைகள் குவிவதாக பேரூராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.தூய்மை பணியாளாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து மட்க செய்வதற்கு குலசேகரம் பேரூராட்சியில் போதிய இடவசதியில்லை. பரப்பளவு குறைந்த இப்பேரூராட்சியில் எல்லா பக்கங்களிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் என நிரம்பியிருப்பதால் குலசேகரம் பேரூராட்சிக்குள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு இயலாதநிலை உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்வரை குலசேகரம் சந்தையில் குவியும் குப்பைகளுடன் பிற பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளையும் சந்தையின் ஒரு பகுதியில் குவித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். மழைகாலங்களில் இது அழுகி துர்நாற்றம் வீசுவதோடு இதிலிருந்து வழியும் நீர், நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் கலந்து குடிநீராதாரம் பாதிக்கப்பட்டது.மேலும் துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்பட்டது.

வெயில்காலங்களில் குப்பைகள் அதிகம் குவியும் போது அங்கேயே தீ வைத்து எரிப்பதனால் பெரும் புகைமூட்டம் கிளம்பி ஆபத்தான சூழல் எற்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து கட்டுப்படுத்திய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.இதனால் குலசேகரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொன்மனை, திற்பரப்பு பேரூராட்சிகளில் வளமீட்பு பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மாற்று ஏற்பாடாக நிரந்தரமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

இதன்பலனாக திற்பரப்பு பேரூராட்சியில் திருநந்திகரை வேட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மலைபகுதியை ஒட்டிய வனபகுதிக்கு அருகில் இப்பகுதி உள்ளது. குடியிருப்புகளும் இதன் அருகில் இல்லை. திருநந்திகரையிலிருந்து பேச்சிப்பாறை செல்லும் பிரதான சாலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது. ஒதுக்குப்புறமான இடம் என்பதால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உகந்த இடமாக இது தேர்வு செய்யப்பட்டது. இதற்காக 3 ஏக்கர் இடம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது.

இந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல வசதியாக அந்த பகுதியிலுள்ள நீரோடையை கடந்து செல்வதற்கு ரூ. 25 லட்சம் செலவில் பாலம் அமைக்கப்பட்டது. சாலையின் குறிப்பிட்ட பகுதி பேவர் பிளாக் கட்டைகள் பதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த பகுதியில் திற்பரப்பு மற்றும் குலசேகரம் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். இந்த பகுதியை இரண்டு பேரூராட்சிகளுக்கும் பிரித்து வழங்க பேரூராட்சி உதவி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இதனால் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது என்ற சந்தோஷத்தில் குலசேகரம் பேரூராட்சி சார்பில் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் சுற்றுசுவர் அமைக்க ரூ. 14 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதேபோன்று திற்பரப்பு பேரூராட்சி தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஏற்படுத்தி அங்கு வளமீட்பு பூங்கா அமைக்க ரூ. 59 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ளூர் அரசியல் இந்த திட்டத்தில் விளையாட தொடங்கியது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இதனால் அங்கு திடகழிவு மேலாண்மை திட்டம் முடங்கி போய் உள்ளது. குலசேகரம் பேரூராட்சி பகுதிகளில் வீதிகளில் குவியும் குப்பைகளை என்ன செய்வது என்று தெரியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கையெடுத்து தேர்வு செய்யப்பட்ட பகுதியை இரண்டு பேரூராட்சிக்கும் பிரித்து வழங்கி இத்திட்டத்தை நிறைவேற்றுவதோடு குப்பையில்லா குமரிமாவட்டத்தை உருவாக்க தக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

குமரிமாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக குலசேகரம் உள்ளது. நகர பகுதியில் உள்ளது போன்ற நெருக்கடியான சூழல் குலசேகரத்தில் உள்ளது. ஆனால் கட்டமைப்பு வசதிகள் இல்லாதநிலை உள்ளது. திற்பரப்பு பேரூராட்சிக்கு அடையாளமாக திற்பரப்பு நீர்வீழ்ச்சி உள்ளது. திற்பரப்பு பேரூராட்சி பரந்து விரிந்த பகுதியாக உள்ளது. இவை இரண்டையும் ஒன்றிணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

அப்போது இதேபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன் எல்லாவகையான அடிப்படை வசதிகளும் செய்ய இயலும். இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்

இதுகுறித்து குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்திஜேம்ஸ், துணை தலைவர் ஜோஸ்எட்வர்ட் ஆகியோர் கூறுகையில், குலசேகரம் பேரூராட்சி வேகமாக வளர்ச்சிகாணும் பகுதியாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலுள்ளவர்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்து வந்து செல்கின்றனர். இதனால் பேரூராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டியது அவசியமானது. இதற்காக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசிற்கு சொந்தமான இடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தும் போது அதனை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு குலசேகரம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தை அளவீடு செய்து பேரூராட்சிக்கு வழங்கி அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post குலசேகரத்தில் தினமும் 5 டன் குப்பை குவிகிறது திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முட்டுக்கட்டை-செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kulasekhara ,Kulasekaram ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளிக்க தடை...