கோவில்பட்டி : கன்னியாகுமரி அருகே உள்ள கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் நெல்சன் (62). இவர், பூச்செடிகளை மொத்தமாக வாங்கி வேனில் ஏற்றி ஊர், ஊராக கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளை மொத்தமாக கொள்முதல் செய்த வியாபாரி நெல்சன், அதனை மினி லாரியில் ஏற்றி சென்னைக்கு கொண்டு சென்றார்.
லாரியை கல்குளம் பகுதியைச் சேர்ந்த சோமன் மகன் பிசின் (34) என்பவர் ஓட்டினார்.நேற்று அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மினிலாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினிலாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. கிளீனர் சீட்டில் உட்கார்ந்திருந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். டிரைவர் பிசின் காயமின்றி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து நாலாட்டின்புத்தூர் எஸ்ஐ அங்குதாய், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மினிலாரியில் இடிபாடுகளுக்குள் சிக்கி யிருந்த நெல்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது மினி லாரி மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.