×

கான்கிரிட் காட்டிற்கு இடையே ஒரு உணவு காடு… தமிழாசிரியரின் பசுமைப் பணி!

விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வரும் சூழலில் வீட்டு மனையை விவசாய நிலமாக மாற்றி நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வருகிறார் திரு. ஏகாம்பரம். ஓய்வுப் பெற்ற தமிழ் ஆசிரியரான இவர் தன் குடும்பத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த இவர் 50 சென்டில் டிம்பர் மரங்களையும் வீட்டிற்கு தேவையான பல வகை காய்கறிகளையும் பயிரிட்டுள்ளார். “நான் ஒய்வு பெற்ற பிறகு சேமித்து வைத்திருந்த பணத்தில் வீட்டு மனைகளை வாங்கினேன். நானும் மனைவியும் மட்டுமே இங்கு தங்கி இருப்பதால் அதற்கு தேவையான அளவிற்கு மட்டும் வீட்டை கட்டி விட்டு மீதியுள்ள நிலத்தில் 2013-ம் ஆண்டு முதல் மரங்களை நட ஆரம்பித்தேன்.

அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் விவசாயம் என் அனுபவத்தில் ஊறி இருந்தது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நஞ்சில்லா உணவு அவசியம் என்பதை உணர்ந்து என் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன். கத்திரிக்காய், முள்ளங்கி, தக்காளி, புடலங்காய், செடி அவரை, வெண்டை, வாழை, கொத்தமல்லி, புதினா, உளுந்து, வேர்கடலை, பாசி பயறு என வீட்டிற்கு தேவையான அனைத்தையும் நான் தோட்டத்தில் பயிரிட்டு உள்ளேன். வாழையில் கற்பூர வல்லி, பொந்தன், ஏலக்கி, சிறுமலை என 4 ரகங்களை நட்டுள்ளேன். வீட்டிற்கு போக மீதம் இருக்கும் காய்கறிகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன். எதையும் வெளியில் விற்பனை செய்வது இல்லை” என்றார்.

10-க்கு 10 என்ற இடைவெளியில் மகோகனி, வேங்கை, ஈட்டி, வெண் கடம்பு, மஞ்சள் கடம்பு உள்ளிட்ட பல்வேறு ரகங்களை கலந்து சுமார் 150 மரங்களை வளர்த்து வருகிறார். இந்த மரம் வளர்ப்பு குறித்து கூறும் போது, “மரங்கள் நடுவதால் நமக்கும் மற்றவர்களுக்கும் பல வழிகளில் நன்மை விளைகிறது. இந்த இடமே பசுமையாக குளிச்சியாக மாறியுள்ளது. தூய்மையான நல்ல காற்றை நானும் எனது மனைவியும் சுவாசிக்கும் வாய்ப்பை இந்த நிலம் எங்களுக்கு அளிக்கிறது. தோட்டத்தை பராமரிப்பதற்கு வெளியில் இருந்து யாரையும் வேலைக்கு வைத்து கொள்ளவில்லை. நானும் எனது மனைவியும் சேர்ந்தே பார்த்து கொள்கிறோம். நாங்கள் இந்த வயதில் மரம் வளர்ப்பதை பார்த்து அருகில் உள்ள மற்றொருவர் 5 சென்ட் நிலத்தில் மரம் நட்டுள்ளார்.

என்னை போலவே அவரும் ஈஷா நர்சரியில் இருந்து ரூ.3 என்ற குறைந்த விலைக்கு மரக்கன்றுகளை மானிய விலையில் பெற்று நட்டுள்ளார். மரம் நடுவதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் நேரில் வந்து இலவசமாக ஆலோசனைகள் வழங்குகின்றனர். டிம்பர் மரங்கள் நிலத்தில் இருக்கும் வரை சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். 15, 20 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு தேவை இருந்தால் வெட்டி விற்கும் போது பொருளாதார ரீதியாகவும் பெரும் பயன் தரும். எனவே, நிலத்தை வெறுமையாக வைத்திருக்காமல், மரங்களை நட்டால், நிலத்துடன் சேர்த்து மரத்தில் இருந்தும் வருமானம் பார்க்கலாம்” என கூறினார். மரம் சார்ந்த விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கு காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post கான்கிரிட் காட்டிற்கு இடையே ஒரு உணவு காடு… தமிழாசிரியரின் பசுமைப் பணி! appeared first on Dinakaran.

Tags : Nanjilla ,
× RELATED விவசாய பயிற்சி முகாம்