×

படிப்பு, வணிகம், வேலைவாய்ப்புக்காக பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழரை காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது:தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்குமான தொடர்பு மிக, மிக அதிகம்

* டோக்கியோ வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: படிப்பு, வணிகம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேடல்களுக்காக பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்குமான தொடர்பு மிக மிக அதிகம் என்றும் டோக்கியோவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பானில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக டோக்கியோவில், ஜப்பான் வாழ் தமிழர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை போற்றும் வகையில் நடைபெற்ற தமிழர் தற்காப்புக் கலையான வர்மக் கலை, பரதநாட்டியம், மிருதங்க இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, ஜப்பான் நாட்டில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களையும், ஜப்பான் தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ் இணைய கல்வி கழகத்தின் மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்ச் மொழியை கற்றுக் கொள்ளும் வகையில் ஜப்பானில் உள்ள வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கம் மற்றும் ஜப்பான் தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஜப்பான் வாழ் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: ஜப்பான்-தமிழ் இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் சொல்வார்கள். இரண்டும் ஒரே மாதிரியான இலக்கணக் கட்டமைப்பு கொண்டவை என்று சொல்லப்படுகிறது. தமிழர்கள் ஜப்பான் மொழியைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜப்பானியர்களும் தமிழைக் கற்க முயற்சிக்கிறார்கள். பேராசிரியர் சுசுமு ஓனோ தனது வாழ்க்கையில் 30 ஆண்டுகள் தமிழ்-ஜப்பானிய மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்திருக்கிறார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான யயோய் காலத்து ஈமத் தாழிகளில் உள்ள எழுத்துகளுக்கும், தமிழ்நாட்டின் பெருங்கற்காலப் பண்பாட்டின் ஈமத் தாழிகளில் உள்ள எழுத்துகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதைக் கண்டுபிடித்தவர் அவர். பொங்கல் திருநாளுக்கும் ஜப்பானிய அறுவடை திருவிழாவுக்கும் ஒற்றுமை இருப்பதை எழுதி இருக்கிறார்.

ஜப்பான் நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். நம் அடுத்த தலைமுறையான குழந்தைகளுக்கு தமிழைப் படிக்க ஊக்குவிப்பது; ஜப்பானில் உள்ள பள்ளிகளில் தமிழ் நூலகங்கள் அமைக்க உதவி புரிவது; பள்ளிகளுக்கிடையேயான தமிழ் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் நடத்துவது; போட்டிகள் நடத்துவது; தமிழ் இலக்கியத்தை பரப்புவது; தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும், தமிழ் எழுதப் படிக்க தெரியாத தமிழர்களுக்குத் தமிழைக் கற்றுக்கொடுப்பது; தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது எனப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வரும் தமிழ்ச் சங்கத்தினரை நான் மனதார பாராட்டுகிறேன்.

படிப்பு – வணிகம்-வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேடல்களுக்காக பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்வுடன் தான் 2010ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு வெளிநாடுவாழ் தமிழர்களின் துயரங்களை களைந்திட – வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு ஒன்றை மறுவாழ்வுத்துறையில் உருவாக்கி அரசாணை வெளியிட்டதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலம் பேணிட வாரியம் ஒன்று அமைத்திடவும் சட்டமுன்வடிவை உருவாக்கியது. ஆனால் தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக இந்த முயற்சிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது. எனினும் தற்போதைய திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, அயலகத் தமிழர் நலனுக்கென தனியே ஒரு துறையை உருவாக்கியுள்ளதுடன், அதற்கென தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டு, அயலகத் தமிழர்களின் உடனடி தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்துவைக்கப்பட்டு வருகிறது.

அயலகத் தமிழர்களின் நலன் காத்திட தனி வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்து இருந்தார். அதனையும் செயல்படுத்திக் காட்டி இருக்கிறோம். ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அயலகத் தமிழர் நலவாரியத்தை அமைத்து ஆணையிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனவரி 12ம் நாள் அயலக தமிழர் நாளாகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் உலகெங்குமிருந்து 200 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் செலவில் இரண்டு வார கால பண்பாட்டுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ் இணையவழிக் கல்வி பரப்புரைக் கழகத்தின் மூலம் ‘கற்றலும் கற்பித்தலும்’ என்ற அடிப்படையில் 53 மாணவர்கள் தமிழைப் பயின்று வருகின்றனர்.

இப்படி தமிழ்ப் பயிலும் இந்த இளந்தளிர்கள், ஜப்பான் நாட்டில் உள்ள நம் தமிழ்ச் சொந்தங்களிடையே – தமிழ் கற்பது கற்பிப்பதில் பெரும் எழுச்சியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இந்த விழாவின் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இனிய வரவேற்பை தந்திருக்கக்கூடிய உங்களுக்கு எல்லாம் இந்த நேரத்திலே தமிழ்நாட்டினுடைய முதல்வராக மட்டுமல்ல, என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருந்து, அந்த வகையில், என்றைக்கும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன், உங்களுக்கு என்றைக்கும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கலாநிதி வீராசாமி எம்பி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post படிப்பு, வணிகம், வேலைவாய்ப்புக்காக பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழரை காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது:தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்குமான தொடர்பு மிக, மிக அதிகம் appeared first on Dinakaran.

Tags : Tamils ,Tamil Nadu ,Japan ,Chief Minister ,M.K.Stal ,Tokyo ,Chennai ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!