×

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் துணை ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடந்து முடிந்துள்ள நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் துணை ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், கேபினட் செயலக கட்டிடம், எம்பி.க்கள் அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளை டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. தற்போது துணை ஜனாதிபதி அலுவலக மற்றும் இல்லம்(என்கிளேவ்), பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், கேபினட் செயலகம், எம்பி.க்கள் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்,பாதுகாப்பு துறை அலுவலகம் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த பணிகளுக்கு ரூ.1,189 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவான கேபினட் செயலக திட்டத்தின் கீழ் 10 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் அலுவலகங்கள் இயங்கும். டெல்லியில் உள்ள சாஸ்திரி பவன், உத்யோக் பவன்,நிர்மாண் பவன், ரயில் பவன் போன்ற கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 24 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வீட்டு வசதி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ பல்வேறு அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 கோடி செலவாகிறது. பொதுவான கேபினட் செயலகம் கட்டுவதால் இந்த தொகை அரசுக்கு மிச்சமாகும்’’ என்றார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே அரசு அலுவலகங்களாக செயல்பட்டு வந்த நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் ஆகியவை அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது.

The post சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் துணை ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் கட்டும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vice President ,Prime Minister's Office ,Central ,Vista ,New Delhi ,Central Vista ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...