×

‘என்னுடைய புருஷனுக்கு மரியாதை கொடுங்க..’ரூ.1000 அபராதம் போட்ட போலீசை மிரட்டிய பெண்: வீடியோ வைரல்

திருப்பூர்: திருப்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தவிர பிற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு நுழைவாயிலில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் உள்ளே வரும் வாகனங்களை போலீசார் நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தம்பதி குழந்தையுடன் டூவீலரில் வந்தனர். அவர்கள் பேருந்து நிலையத்துக்குள் டூவீலரில் சென்றதால் தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது டூவீலரில் வந்தவர், ‘1000 ரூபாய் அபராதம் போட்டுள்ளான்’ என போலீசாரை ஒருமையில் பேசி உள்ளார். இதனை கேட்ட போலீசார், ‘ரசீது கொடுத்துள்ளோம், அபராதம் கட்ட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதனை ஏற்காமல் 1000 ரூபாய் அபராதம் எப்படி விதிக்கலாம்? என கணவருக்கு ஆதரவாக மனைவி ஏக வசனத்தில் பேச துவங்கினார். இதனை போலீசார் வீடியோ எடுக்க துவங்கியதும், ‘என்னுடைய புருஷனுக்கு மரியாதை கொடுங்க… குழந்தை முன்னாடி கத்தி பேசாதீங்க… ஏன் ரூடா பேசுறீங்க… அடிப்பீங்களா…’ என கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதெல்லாம் ரூல்ஸ் கிடையாது என விடாது பேசிய பெண்ணை சமாளிக்க முடியாத போலீசார் பெண் போலீசாரை வரவழைக்க முயன்றனர். இதையடுத்து மனைவியை கணவர் அழைத்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

The post ‘என்னுடைய புருஷனுக்கு மரியாதை கொடுங்க..’ரூ.1000 அபராதம் போட்ட போலீசை மிரட்டிய பெண்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...