×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 50,000 பேர் பங்கேற்பு

* கடும் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதி

* செப்டம்பர் 15ம் தேதி மெயின் தேர்வு தொடக்கம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 56 நகரங்களில் நடந்த தேர்வில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு கூடங்களில் தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். செப்டம்பர் 15ம் தேதி மெயின் தேர்வு தொடங்குகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2023ம் ஆண்டுக்கானது) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 21 வகையான பதவிகளில் காலியாக உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 1ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் பட்டதாரிகள் வரை விண்ணப்பித்து இருந்தனர். இதில், 7 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே 28ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. அதன்படி, சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 79 நகரங்களில் நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடந்தது. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் 60க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாற்று திறனாளிகள் அதிகமானோர் தேர்வு எழுதினர். காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு நடக்கும் அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் 17 நாட்களில் வெளியிடப்பட்டது. அதே போல தற்போது நடந்துள்ள முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் 19 அல்லது 20ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது. மெயின் தேர்வு 24 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* கடந்த ஆண்டை விட தேர்வு ரொம்ப கஷ்டம்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. காலை, மாலை என 2 நேரம் நடந்தது. இத்தேர்வை எழுதிய மாணவர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை ஓப்பிடும் போது இந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வு ரொம்ப கடினமாக இருந்தது. பிற்பகலில் நடைபெற்ற திறனறிவு தேர்வு ரொம்ப கஷ்டமாக இருந்தது. குறிப்பாக திறனறிவு தேர்வில் 35 வினாக்கள் கணிதத்தில் இருந்து வந்தது. இவை அனைத்தும் கடினமாக இருந்தது’’ என்றனர்.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை 7 லட்சம் பேர் எழுதினர்: தமிழகத்தில் இருந்து 50,000 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Civil Service First Exam ,Tamil Nadu ,Maine ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...