×

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது: போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணின் பாலியல் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று விவசாய அமைப்புகளுடன் இணைந்து, புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மேலும் விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடும் மகா பஞ்சாயத்தையும் கூட்ட முயற்சித்தனர். அதனால் புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதாக அறிவித்த மல்யுத்த வீராங்கனைகள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒன்று கூடாத வகையில் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தடையை மீறி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை, டெல்லி போலீசார் பலவந்தமாக கைது செய்தனர்.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் முதல் நாளிலேயே வளைந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டதாவது:
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது: போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Delhi Jandar ,President of ,Indian Wrestling Federation ,BJP ,Brij Bhushan ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...