×

கூடலூர் அருகே சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி உலா: குடியிருப்புவாசிகள் அச்சம்

கூடலூர்: கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதியில் பகலில் யானைகள் கூட்டமாக உலா வருவதால் மின்வாரிய குடியிருப்புவாசிகள் மற்றும் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது சுருளியாறு மின் நிலையம். இது மேகமலை வன உயிரின சரணாலய பகுதியாகும். இங்கு கடந்த 40 ஆண்டுக்கு முன் இரவங்கலாறு அணை தண்ணீர் மூலம் 35 மெகாவாட் மின்சார தயாரிக்கும் மின்நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு பணியாற்றும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். இந்த மின்நிலையத்தில் பணிபுரிவோர் பலர் அனைத்து தேவைகளுக்கும் அருகிலுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கம்பம், கூடலூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு 1974ல் தொடங்கப்பட்ட ஆரம்பப்பள்ளியும் உள்ளது.சுருளியாறு மின்நிலைய வனப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய விளை நிலங்கள் உள்ளது.

இதில் வாழை, கொட்டைமுந்திரி, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. வனப்பகுதியை ஒட்டி விளைநிலங்கள் இருப்பதால், அவ்வப்போது யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டை விட்டு வெளியேறி விளைநிலத்திற்கு வருவதுண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 3 யானைகள் ஒரு குட்டி யானையுடன் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உலா வந்தது. இதனால், குடியிருப்பில் இருந்த மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளிவரவில்லை. நீண்ட நேரத்திற்குப் பின்பே யானைகள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறியது. குடியிருப்பு பகுதி மற்றும் மின் நிலையத்தைச் சுற்றிலும் யானைகள் வராமல் தடுக்க அகழி அல்லது சோலார் மின்வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் அருகே சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி உலா: குடியிருப்புவாசிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Elephants ,Sirilyaru Elephant ,Kudalore ,Cuddalore ,Sirliyaru power station ,Scylliaru Elephant ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...