×

ஜப்பான் நாட்டின் பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற ஒசாகா கோட்டையில் முதல்வர்

சென்னை: உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழமை வாய்ந்த ஒசாகா கோட்டையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஜப்பானில் உள்ள ஒசாகா மாகாணத்தில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஒசாகா கோட்டையை பார்வையிட வருமாறு ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒசாகா கோட்டையினை பார்வையிட்டார். ஒசாகா கோட்டை அசுச்சி-மோமோயாமா காலத்தின் 16ம் நூற்றாண்டில் ஜப்பானை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த கோட்டை 61,000 சதுரை மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஜப்பானிய அரசால் இக்கோட்டை முக்கியமான கலாசார சொத்தாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இக்கோட்டையானது அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் போன்ற இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையையும், தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாட்டு சான்றுகளை உலகம் அறிந்து கொள்ளும் வகையில், அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உலகத் தரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை நிறுவியது. தமிழ்நாட்டின் பண்டைய பொருநை ஆற்றங்கரையின் நாகரிகப் பெருமையை வெளிப்படுத்தும் முகமாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தப்படுத்த உலகத் தரத்துடன் பொருநை அருங்காட்சியகத்தை அமைத்திட அடிக்கல் நாட்டியது போன்ற பண்டைய கலாசார பெருமைகளை மீட்டெடுத்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம், பண்டைய கலாச்சார சின்னங்களை போற்றி பாதுகாத்திடும் நடவடிக்கைகளில் ஜப்பான் அரசும், தமிழ்நாடு அரசும் ஒன்றுபோல் செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஒசாகா கோட்டை அருங்காட்சிய இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஜப்பான் நாட்டின் பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற ஒசாகா கோட்டையில் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Japan ,Osaka Castle ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Osaka ,
× RELATED ஜப்பானில் புல்லட் ரயிலில் மல்யுத்தப் போட்டியை கண்டு ரசித்த பயணிகள்..!!