×

விருதுநகர் அதலக்காய், கொடுக்காப்புளி, பஞ்சவர்ணம் மாம்பழத்துடன் சேர்த்து சாத்தூர் வெள்ளரிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

*குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
விவசாயி கணேசன்(சிவகாசி): கன்னிசேரிபுதூர் அர்ஜூனா நதியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. தடுப்பணையில் பட்டாசு ஆலை கழிவுகளுடன் தண்ணீர் தேங்கி அசுத்த நீராக உள்ளது. இங்கிருந்து தான் 5 ஊராட்சிகளுக்கான தண்ணீர் செல்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க விஜயமுருகன்: விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாய்களில் எடுக்க அனுமதிப்பதில்லை. ஆனால் மர்மநபர்கள் அதிக அளவில் மண்ணை திருடி விற்பனை செய்வது தொடர்கிறது. திருச்சுழி புலியூரான் கல்குவாரி, சிவகாசி பாறைப்பட்டி கல்குவாரிகளில் கண்மாய் பாதை, நீர்வரத்து பாதைகளை அடைத்து விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும்.டிஆர்ஓ ரவிக்குமார்: கலெக்டருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக விவசாயிகள் சங்க ராமச்சந்திரராஜா: சாத்தூர் வெள்ளரிக்காய், ராஜபாளையம் பஞ்சவர்ணம் மாம்பழம், விருதுநகர் கொடுக்காப்புளி, அதலக்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பருத்தியை இ-நாம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழம் ஏலத்தை உழவர் சந்தைகளில் நடத்த வேண்டும்.
தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன்: புவிசார் குறியீடு பெறுவதற்கு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக விவசாயிகள் சங்க அம்மையப்பன்: கோடைகால நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது துவங்கப்படும்?

வேளாண்துறை இணை இயக்குநர் பத்மாவதி: ஜூன் மாதத்தில் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.மம்சாபுரம் முத்தையா: பொதுப்பணித்துறை கண்மாய்களில் மீன்பாசி குத்தகையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என இருதுறைகள் இன்றி, மீன் வளர்ப்புத்துறையினர் ஏன் உள்ளே வருகின்றனர். கண்மாய் கட்டுப்பாடு 3 ஆண்டுகள் வரை குத்தகைதாரர்களுக்கு செல்வதால் கண்மாயை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். செண்பகத்தோப்பில் விவசாயிகளிடமும் ரூ.20 வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கலெக்டர் ஜெயசீலன்: கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் சந்தை அமைக்க வேண்டும். பசுமாட்டுக்கு கடன் எங்கும் வழங்குவதில்லை என்பது உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் மம்சாபுரம், வத்திராயிருப்பு பகுதியில் முழு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்திட விவசாயிகளால் கோரப்பட்டது. வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக அமைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், திருச்சுழி வட்டம் மணலேந்தல் கிராமம், பெரிய கண்மாய், சின்ன கண்மாய்களில் நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

The post விருதுநகர் அதலக்காய், கொடுக்காப்புளி, பஞ்சவர்ணம் மாம்பழத்துடன் சேர்த்து சாத்தூர் வெள்ளரிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Athalakkai ,Dhikapuli ,Panchavarnam ,Chatur ,Kuradir ,Virudhunagar Collector ,Collector ,Jayaseelan ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...