×

பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட குமரியில் சாலையோரம் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் சாலையோரம் குப்பைகள் அதிக அளவு தேங்குகிறது. குப்பையை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். குமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் மாவட்டத்தில் தேங்கும் குப்பைகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் 11 நுண்ணுரம் செயலாக்கம் ைமயங்கள் மூலம் உரமாக்கப்பட்டு ஒரு கிலோ உரம் ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாநகர பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைளை தரம் பிரித்து வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வீடு வீடாக வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும், வெளியே வீசக்கூடாது என மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சாலையோரம் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாநகராட்சியை ஒட்டியுள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இருந்து குப்பைகளை மாநகராட்சி பகுதியில் கொட்டப்படுகிறது என மாநகராட்சி மேயருக்கு புகார் வந்தது. அவரது நடவடிக்கையால் வெளியே இருந்து மாநகராட்சி பகுதியில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகர பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது குறைந்துள்ளது.

ஆனால் மாவட்டத்தின் பிற பகுதியில் இரவு வேளையில் சாலையோரம் குப்பைகள் கொட்டுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் குப்பைகளை தேங்கியவுடன் அந்த குப்பையில் தீ வைத்து எரிக்கும் நிலையும் இருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாகர்கோவில் அருகே வெள்ளமடத்தில் இருந்து குலசேகரன்புதூர் செல்லும் சாலையின் ஓரம் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டுள்ளது. இதில் அதிகம் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. இந்த குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. குமரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பல இடங்களில் சாலையோரம் வீசப்படும் குப்பைகளில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இதனால் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு மீண்டும் தலைதூக்கிள்ளது தெரிகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டி கவர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் பெயர் அளவிற்கு சோதனை நடத்திவிட்டு செல்லாமல் தீவிர சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றனர்.

The post பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட குமரியில் சாலையோரம் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagargo ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...