×

ஓசூர் அருகே மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து சடலத்துடன் மறியல்-அதிகாரிகள் சமரசம்

ஓசூர் : ஓசூர் அருகே, மயானத்திற்கு செல்லும் பொது பாதையை தனி நபர் அடைத்து ஆக்கிரமிப்பு செய்ததால், இறந்த மூதாட்டி சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் தவித்த உறவினர்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.ஓசூர் அருகே ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தாயம்மாள்(65). இவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து நேற்று மாலை, அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர்.

அப்போது வழக்கமாக செல்லும் வழிப்பாதையை தனி நபர் ஒருவர், தனது இடம் என கூறி சாலையில், சிமெண்ட் கல் மற்றும் எம்.சாண்ட் வைத்து தடுத்துள்ளார். இதனால் மூதாட்டி சடலத்தை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாமல், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தவித்தனர். பின்னர் சடலத்தை அங்கேயே வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் உத்தனப்பள்ளி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்தவர், பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தினார். பின்னர், மூதாட்டி சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘காலம் காலமாக சென்ற பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது வேதனையாக உள்ளது. இச்சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றனர்.

The post ஓசூர் அருகே மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து சடலத்துடன் மறியல்-அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Mayanam ,Osur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...