×

சுற்றுலா பயணிகள் என நினைத்து அரசு பேருந்தில் மாஞ்சோலை சென்றவர்களை வனத்துறையினர் இறக்கி விட்டதால் பரபரப்பு

* பயணிகள் கடும் வாக்குவாதம் * மணிமுத்தாறு சோதனை சாவடியில் பரபரப்பு

அம்பை : சுற்றுலா பயணிகள் என நினைத்து அரசு பேருந்தில் வந்தவர்களை மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விட்டனர். இதையடுத்து அவர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை மணிமுத்தாறு அணைக்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 4,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள இப்பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட், கோதையாறு, குதிரைவெட்டி, ஊத்து, நாலுமுக்கு போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் செல்வதற்கு தினமும் 4 முறை பேருந்து இயக்கப்படுகிறது. இதன் மூலம் மலை மீதுள்ள பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக கல்லிடைக்குறிச்சி, நெல்லை செல்வதற்கு இந்த பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர்.

இயற்கை எழில் சூழ்ந்த மாஞ்சோலை பகுதி சுற்றுலாதலமாக விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். மாஞ்சோலை செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் தலா ஒரு நபருக்கு ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம். மாஞ்சோலை சுற்றுலா வருவோர் வனத்துறையின் சுற்றுலா வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இல்லையெனில் சுற்றுலா பயணிகள் சொந்த வாகனத்தில் செல்ல வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும். அதுவும் காலை 8 மணிக்கு சென்றால் மாலை 5 மணிக்குள் மாஞ்சோலையில் இருந்து இறங்கி விட வேண்டும் என கூறப்படுகிறது.

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாஞ்சோலை சென்ற அரசு பஸ்சில் சென்ற சிலரை சுற்றுலா செல்வதாக எண்ணி தங்களுடைய வனத்துறை சுற்றுலா வாகனத்தில் தான் செல்ல வேண்டும் எனக்கூறி வனத்துறை அலுவலர்கள் பயணிகளை வன சோதனை சாவடியில் இறக்கி விட்டு உள்ளனர்.

ஆனால் இப்பயணிகள் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களை காணச் சென்றதாக தெரிகிறது பயணிகள் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு தான் செல்கிறோம். யாரும் சுற்றுலா செல்லவில்லை என வனத்துறையினரிடம் விளக்கியுள்ளனர். ஆனால் இதனை வனத்துறையினர் ஏற்க மறுத்தனர். இதனால் வனச்சரக காவலர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாஞ்சோலை பகுதிக்கு அரசு பேருந்தில் சென்ற பயணிகளை வனச் சோதனை காவலர்கள் இறக்கி விட்ட விவகாரம் குறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் சுமதி, அம்பை கோட்ட வனச்சரக அதிகாரிகள் நித்யா, தமிழரசன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மணிமுத்தாறு சப் இன்ஸ்பெக்டர்கள் காசி விஸ்வநாதன், முத்துவேல் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பயணிகள் அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு தான் செல்கின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பிறகு அவர்களை அரசு பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் மட்டும் கெடுபிடி

இதுகுறித்து பேருந்தில் வந்த பயணி ஒருவர் கூறுகையில், ‘நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் உறவினர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் அவ்வப்போது இவர்களின் வீடுகளில் நடைபெறும் சுக, துக்க நிகழ்வுகளிலும், கோயில் கொடை விழா, கிறித்தவ ஆலய விழாக்களிலும் பங்கு பெறுவது மிகவும் சிக்கலாக உள்ளது. மற்ற மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு அரசு பேருந்தில் சென்று வருவதில் எந்த கெடுபிடிகளும் இல்லை. மேலும் உறவினரை காண வந்த எங்கள் 28 பேரை குழந்தைகள், பெண்கள் ஆகியோரை கொளுத்தும் வெயிலில் பஸ்ஸை விட்டு வெளியே இறங்க வைத்து மணிமுத்தாறு வனச்சோதனை சாவடி அதிகாரிகள் நடத்திய விதம் மிகவும் மனவேதனை அளிக்கிறது’ என்றார்.

The post சுற்றுலா பயணிகள் என நினைத்து அரசு பேருந்தில் மாஞ்சோலை சென்றவர்களை வனத்துறையினர் இறக்கி விட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : manjole ,Dinakaran ,Manjol ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்