×

கொடைக்கானல் சென்று திரும்பியபோது அரசு பேருந்து மீது கார் மோதி ராணுவ வீரர், மனைவி பலி

*மகள்கள் உள்பட 5 பேர் படுகாயம் *திருவெண்ணெய்நல்லூர் அருகே பரிதாபம்

திருவெண்ணெய்நல்லூர் : டயர் வெடித்து அரசு பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ராணுவ வீரரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் முகையூரை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் சகாயராஜ்(46). இவர் ராணுவத்தில் சுபேதராக பணிபுரிந்து வந்தார். குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் இவர், ராணுவத்திலிருந்து ஒரு மாத விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தார்.

குழந்தைகளுடன் கோடை விடுமுறையை கொண்டாட சகாயராஜ், அவரது மனைவி ஆசிரியை பிரிட்டோமேரி(40), மகள்கள் ஷெரின்(8), ரிங்ஸி(5), பிரிட்டோமேரியின் தங்கை புனிதா(27) ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சென்றனர்.சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று கொடைக்கானலில் இருந்து முகையூருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். சகாயராஜ் காரை ஓட்டினார். நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் திருவெண்ணெய்நல்லூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சித்தானங்கூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, கார் டயர் திடீரென வெடித்தது.

தொடர்ந்து கார் சினிமாவில் பறப்பது போல் பறந்து சென்று, எதிரே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சகாயராஜ், அவரது மனைவி பிரிட்டோமேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிரிட்டோமேரியின் தங்கை புனிதா, மகள்கள் ஷெரின், ரிங்ஸி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அரசு பேருந்து ஓட்டுநர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் வேணு மகன் விஜயகுமார் (48), நடத்துநர் கடலூர் கருணாகரன் மகன் லோகேஷ் (47) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பேருந்தில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், புனிதவள்ளி மற்றும் போலீசார், இறந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களையும் அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கொடைக்கானல் சென்று திரும்பியபோது அரசு பேருந்து மீது கார் மோதி ராணுவ வீரர், மனைவி பலி appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Thiruvanneinallur ,Thiruvannaynallur ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்