×

ஊட்டி அருகே உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட உணவில் பூரான்; 4 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம்

*அபராதம் விதித்து அதிகாரிகள் நோட்டீஸ்

ஊட்டி : ஊட்டி அருகே ஓட்டலில் வாங்கி சென்று சாப்பிட்ட உணவில் பூரான் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு, நரிகுளியாடா பகுதியை சேர்ந்த தியாகராஜன் (32) மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள காய்கறி தோட்டத்தில் உர மூட்டை தூக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். மதியம் முத்தோரை பாலாடாவில் உள்ள உணவகத்தில் 4 உணவு பார்சல் வாங்கி தோட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது தியாகராஜனின் உணவில் பூரான் இருந்தது. இதனைப்பார்த்த 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக முத்தோரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அவர்கள் முதலுதவி சிகிச்சை எடுத்துள்ளனர். பின்னர் பூச்சியுடன் உணவு பார்சலை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உணவகத்தில் கேட்டுள்ளனர். அவர்கள் மிகவும் அலட்சியமாக பதிலளித்ததுடன், ‘‘அவ்வப்போது தெரியாமல் புழு பூச்சிகள் உணவில் விழுவது சகஜம்தான். எனவே இதனை பெரிதுபடுத்த வேண்டாம். உணவு பாதுகாப்புத்துறை, கலெக்டர் என எங்கு புகார் அளித்தாலும் அபராதம் செலுத்தி விட்டு மீண்டும் கடையை நடத்துவோம்’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே உணவில் விஷ பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து அதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது அங்கு போதிய இடவசதியின்றி சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உணவகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் பிரிவு-55ன் கீழ் நோட்டீசும் வழங்கப்பட்டது. உணவகத்தை தூய்மைப்படுத்தி அது தொடர்பாக உரிய விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post ஊட்டி அருகே உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட உணவில் பூரான்; 4 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Puran ,Feeder ,Pooran ,Dinakaran ,
× RELATED டி காக் 54, பூரன் 42, க்ருணால் 43* ரன் விளாசல் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது லக்னோ