×

தேசிய பேரிடர் மீட்புகுழு சார்பில் பேரிடர் மீட்பு பணி மாதிரி ஒத்திகை

திருச்சி, மே 27: திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர், காவல்துறையினர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் இணைந்து பேரிடர்கால மீட்பு பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியை நேற்று நடத்தினர். தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உத்தரவு அதிகாரி சங்கர் பாண்டியன், பயிற்சி அதிகாரி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் நேற்று மீட்பு பணி ஒத்திகை செய்து காண்பித்தனர். முதல் கட்டமாக பேரிடர் நடந்த இடத்தில் பாதுகாப்பு வளையங்களை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யப்படுகிறது. பின்னர் கட்டிட இடுபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் குறித்து அறிந்து கொள்ள நவீன கேமராக்களின் உதவியோடு சிக்கி உள்ளவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்தனர். அதன் பின்னர் இடிபாடுகளை உடைத்து மீட்பது, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ளவர்களை கயிற்றின் மூலம் கட்டி அவரை பாதுகாப்பாக கீழே இறக்குவது என மீட்பு பணி ஒத்திகையை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு உதவி செய்திடும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அவசர கால மீட்பு ஊர்தி, கட்டிட இடுபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்க கான்கிரீட் கட்டிடங்களை இடிப்பதற்கான கருவி, கான்கிரீட் கம்பிகளை துண்டிப்பதற்கும் அதனை அகற்றுவதற்குமான கருவி, உடைந்த கான்கிரீட் துண்டுகளை உயரத்தில் தூக்குவதற்கான கருவிகள், தீயின் புகை மற்றும் கான்கிரீட் துகள்களின் புகைகளை அகற்றுவதற்கான கருவி தீயணைப்பு கருவி, வெள்ள அபாய காலத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான பைபர் படகு, உயிர் காக்கும் கவசம் மற்றும் அதற்கு தேவையான கருவிகள் இடம்பெற்றிருந்தது. இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அந்தநபருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மாதிரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் ஏற்படும் தொலை தொடர்பு பிரச்னைகளில் இருந்து அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப இயந்திரங்களுடன் கூடிய வாகனம் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனம் இயற்கை சீற்றங்களின்போது தொலைதொடர்புகள் பாதிக்கப்படும்போது, சேட்டிலைட் உதவியுடன் செயல்படும் வகையில் இந்த தொலைத்தொடர்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வீடியோ கான்பரன்சிங், இணையதளம், ரேடியோ கான்பிரன்சிங், மூலம் மற்ற மீட்பு குழுக்களை ஒருங்கிணைப்பதற்கான பணியில் இது பயன்படுகிறது. மேலும் வாகனத்தை சுற்றியுள்ள அதிநவீன கேமராக்கள் சம்பவ இடத்தில் நடக்கும் காட்சிகளை உடனுக்குடன் பதிவு செய்து அதனை மத்திய பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

The post தேசிய பேரிடர் மீட்புகுழு சார்பில் பேரிடர் மீட்பு பணி மாதிரி ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Team ,Trichy ,Tamil Nadu ,Collector ,Pradeep Kumar ,
× RELATED திருச்சி, கோவை மற்றும்...