×

திண்டுக்கல் அருகே தொழிலதிபரை கத்தியால் தாக்கி செல்போன், ஏடிஎம் கார்டு பறிப்பு: 3 பேர் கைது

திண்டுக்கல், மே 27: திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகேயுள்ள ருக்மணி அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசிப்பவர் அய்யனார் (45). தொழிலதிபர். இவர், கடந்த மே 24ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் அப்பார்ட்மெண்ட் அருகே தன் மனைவி ரம்யா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் கவுதம், அவரது மனைவி தீர்க்கதர்ஷினி ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த 3 பேர், வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் அய்யனாரிடம் முகவரி கேட்பது நடித்து, அவரது கையில் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர். மேலும் இதை தடுக்க முயன்ற அய்யனாரை அவர்கள் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதில், படுகாயமடைந்த அய்யனாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ பிரபாகரன், ஏட்டு சுரேஷ், தனிப்பிரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், தாடிக்கொம்பு பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அய்யனாரை தாக்கி செல்போன், ஏடிஎம் கார்டை பறித்த திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் (21), ஜஸ்டின் செல்வராஜ் (22), மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (21) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன், ஏடிஎம் கார்டு, ரூ.22,000 பணம், வழிப்பறிக்கு பயன்படுத்திய டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post திண்டுக்கல் அருகே தொழிலதிபரை கத்தியால் தாக்கி செல்போன், ஏடிஎம் கார்டு பறிப்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Ayyanar ,Rukmani Apartments ,Nandavanapatti, Dindigul ,Dinakaran ,
× RELATED பிக்னிக் போன்று கோயிலுக்கு செல்வதா?…...