×

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன திட்டம்: ஜூன் 16க்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்

பழநி: பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன வசதி அமைப்பது தொடர்பாக ஜூன் 16ம் தேதிக்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிகளவு வரும் கோயில்களில் விரைவு தரிசனம் செய்வதற்கு சட்டமன்ற அறிவிப்பின்படி நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ரூ300 கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) வசதி அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், விபூதி, 1 மஞ்சள் பை ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அக்னி நட்சத்திரம் நிறைவு நாள், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கில வருடப்பிறப்பு, தை மாதத்தில் முதல் 5 நாட்கள், தைப்பூச திருவிழாவின் 10 நாட்கள், பங்குனி உத்திர திருவிழாவின் 10 நாட்கள், மாதாந்திர கார்த்திகை தினங்களில் இந்த தரிசனம் இருக்காது. இதுதொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை பக்தர்கள் வரும் ஜூன் 16ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இணை ஆணையர், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாமென்றும், அந்நாளுக்கு பின் கிடைக்கும் ஆலோசனைகள், ஆட்சேபனைகள் ஏற்கப்பட மாட்டாதென பழநி மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான அறிவிப்புகளை அரசு அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

The post பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன திட்டம்: ஜூன் 16க்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Palani Railaikhoil ,Palani ,Palanini ,Palanini Mountaineel ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்